அபிநந்தன் படம் வைத்து அசத்தும் பாக். டீக்கடை - எதிரியையும் டீ நண்பனாக்கும் என்று விளக்கம்
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் பட போஸ்டரை வைத்திருக்கும் பாகிஸ்தான் டீக்கடை குறித்த செய்தி, படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், அந்த கடையும் பிரபலமாகியுள்ளது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்திய பாதுகாப்பு படைவீரர்கள் மீதான தாக்குதலுக்கு பிறகு இந்திய - பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்திய போர் விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் முகாமை தாக்கி அழித்தன.
அப்போது, பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் சென்ற இந்திய விமானம், அந்நாட்டு எல்லையில் விழுந்தது. பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தால் அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் பிடியில் அபிநந்தன் இருந்தபோது வெளியான வீடியோ ஒன்றில், அபிநந்தன் டீ குடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. பின்னர், இந்தியா வசம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவத்தால், அபிநந்தன் இந்தியாவை தாண்டி பல நாடுகளாலும் அறியப்பட்டார்.
இந்நிலையில், கராச்சி நகரில் உள்ள டீக்கடை ஒன்றில் அபிநந்தன் டீ குடிக்கும் காட்சியுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அத்துடன் , இந்த கடையின் டீ, எதிரிகளை நண்பராக்கும் என்ற வாசகம், உருது மொழியில் இடம் பெற்றுள்ளது.
அபிநந்தன் போஸ்டருடன் உள்ள அந்த டீக்கடை குறித்த செய்தியும், படமும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனால், அந்த டீக்கடை பாகிஸ்தானில் மிகவும் பிரபலமாகிவிட்டது.