உலககோப்பைக்கு முன் இந்திய அணி செய்த மோசமான இரண்டு சாதனைகள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இந்திய அணி இந்தப் போட்டியில் இரண்டு மோசமான சாதனைகளை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரு போட்டிகளில் வென்று கெத்து காட்டிய இந்திய அடுத்து இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாக வெற்றியைப் பறிகொடுத்தது. இதனால் 4 போட்டி முடிவில் 2- 2 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. தொடர் யாருக்கு எனத் தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று டெல்லியில் தொடங்கியது. இந்திய அணியில் ஷமி மற்றும் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டு ராகுல் மற்றும் சஹால் நீக்கப்பட்டனர். டாஸ் வென்ற பேட்டிங்கைத் தேர்வு செய்தார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச். அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜா மற்றும் ஆரோன் பின்ச் தொடக்கம் கொடுத்தனர். கவாஜா இந்த முறையும் சிறப்பாக ஆடினார். அவர் சதம் அடித்து அசத்தினார். பீட்டர் ஹென்ஸ்கூம்ப், டர்னர், மார்கஸ் ஆகியோரின் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை குவித்தது.

273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கடந்த முறை கைகொடுத்த ஓப்பனிங் கைகூடவில்லை. இந்திய அணியின் ஓப்பனிங் இணையான ரோஹித், தவான் கூட்டணியை 4-வது ஓவரிலே கம்மின்ஸ் பிரித்தார். இதன்பின் கேப்டன் கோலி சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். இருப்பினும் 20 ரன்களில் டோனிஸ் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனாலும் ரோஹித் நிலைத்து ஆடினார். 56 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஜம்பா பந்துவீச்சில் ஸ்டெம்பிங் மூலம் அவுட் ஆனார். இதன்பின் இறங்கிய வீரர்களில் கேதர் ஜாதவ், புவனேஷ்வர் குமார் தவிர மற்றவர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இருவரும் முறையே 44 மற்றும் 46 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இழந்ததுடன், நான்கு வருடங்களுக்கு ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்தது என்ற மோசமான சாதனையும் படைத்தது. ஆம், 2015ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்றதில்லை. அதேபோல் இன்றைய போட்டி ஐசிசியின் 8000வது ஒருநாள் போட்டியாகும். உலககோப்பைக்கு முன் இப்படியான வரலாற்று போட்டியில் இந்திய அணி தோல்வி தழுவியுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More News >>