கர்நாடகாவில் பாஜகவுக்கு 22 இடங்கள் கிடைத்தால் 24 மணி நேரத்தில் மாநிலத்தில் புதிய அரசு - எடியூரப்பா

கர்நாடகாவில் 22 மக்களவை தொகுதிகளை பா.ஜ.க. வென்றால், அடுத்த 24 மணி நேரத்தில் அங்கு புதிய ஆட்சியை அமைப்பேன் என்று, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில், மொத்தம் 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜக.. 16 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்து வந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அது உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கும் அளவுக்கு பலம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கர்நாடக மூத்த பாஜக தலைவர் எடியூரப்பா, வரும் தேர்தலில், 22 மக்களவை தொகுதிகளை பா.ஜ.க. வென்றால், அடுத்த 24 மணி நேரத்தில் அங்கு புதிய ஆட்சியை அமைப்பேன் என்று, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது, காங்கிரஸை சேர்ந்த 20 எம்எல்ஏக்கள், குமாரசாமி முதல்வராக நீடிப்பதை விரும்பவில்லை; அதிருப்தியுடன் அவர்கள் இருப்பதாக, எடியூரப்பா மேலும் கூறினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்படும் என்ற எடியூரப்பாவின் பேச்சு, மறைமுகமாக மிரட்டுவது போல் உள்ளதாக, எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதேபோல், பாலகோட் விமானத் தாக்குதலால் மோடியின் செல்வாக்கு பெருகியுள்ளது. கர்நாடகாவில், 28 இடங்களை பாஜக வென்றுவிடலாம் என்று, அண்மையில் கருத்து தெரிவித்து, சர்ச்சையில் எடியூரப்பா சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>