பத்ம விபூஷன் குறித்து என்ன சொல்கிறார் இளையராஜா?
மத்திய அரசு என்னை கவுரவிப்பதாக நினைக்கவில்லை. தமிழகத்தையும், தமிழக மக்களையும் கவுரவித்திருப்பதாக கருதுகிறேன் என்று பத்ம விபூஷன் விருது குறித்து இளையராஜா தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இசைத்துறை சாதனை புரிந்தமைக்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கூறியுள்ள இளையராஜா, “மத்திய அரசின் செய்தித் தொடர்புத் துறை அலுவலகத்தில் இருந்து பத்ம விபூஷன் விருது கொடுப்பதற்கான ஒப்புதலுக்காக கேட்டனர்.
ஒப்புதல் தெரிவித்ததோடு, நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறேன் என்று தெரிவித்தேன். அப்போது செய்தி தொடர்புத் துறையைச் சேர்ந்த இணைச் செயலாளர், ‘இந்த விருதுக்கு இதன் மூலம் கவுரவம் அடைகிறது’ என்றார்.
இதன் வாயிலாக மக்கள் என் மீது எந்த அளவுக்கு மதிப்பு வைத்திருக்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது. மத்திய அரசு என்னை கவுரவிப்பதாக நினைக்கவில்லை. தமிழகத்தையும், தமிழக மக்களையும் கவுரவித்திருப்பதாக கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.