சிவகார்த்திகேயன் விஜய் தேவரகொண்டா இடையே புதிய சிக்கல்
By Sakthi
தமிழ் சினிமாவில் புதிது புதிதாக பட அறிவிப்புகள் வருவது வழக்கமே. ஆனால் இன்று ஒரே நாளில் மட்டும் நான்கு படங்கள் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இரும்புத்திரை பட இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ஹீரோ. படத்தின் பணி இன்று பூஜையுடன் தொடங்கியது. படத்தில் சிவாவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவிருக்கிறார். தவிர, நாச்சியார் நாயகி இவானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். யுவன் இசையமைக்க இருக்குற இந்த படத்தை கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் கார்த்தி. அடுத்த கட்டமாக ரெமோ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், கார்த்தியின் 19வது படம். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த கார்த்திக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் நாயகி ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார். முக்கிய ரோலில் யோகிபாபு நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கு இசை விவேக்-மெர்வின்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கன்னட படம் கே.ஜி.எஃப். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது. யஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படம் வலராற்று ஆக்ஷன் படமாக வெளியாகி வசூலையும் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கியது. பெங்களூரு விஜய நகரில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில் பட பூஜை நடைபெற்றது. ஆக்ஷன், மாஸ் காட்சிகள் என கன்னடத்தில் இப்படியொரு படமா என்று வியக்கவைத்த இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்கிரமே திரைக்கு வரும்.
இறுதியாக, இன்றைய நாளுக்கான மற்றுமொரு புதிய படம் அறிவிப்பு விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கும் படமாகும். காக்கா முட்டை படத்துக்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கவிருக்கும் இந்த படத்துக்கு ஹீரோ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நாயகியாக பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கவிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகிறது.
இதில் மற்றுமொரு தகவல் என்னவென்றால், இன்று அறிவிக்கப்பட்ட சிவகார்த்திகேயன்ன் - மித்ரன் படத்துக்கும், விஜய் தேவரகொண்டா - ஆனந்த் படத்துக்கும் ஒரே தலைப்பு. ஹீரோ என்றே இரண்டு படங்களும் பெயரிட்டிருப்பது இரண்டு படத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தேவரகொண்டா படத்துக்கு ‘ஹீரோ’என்ற தலைப்பைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த 2018 ஜூனில் பதிவு செய்து புதுப்பித்துள்ளது படக்குழு. அத்தலைப்புக்கான காலகெடு இந்த ஜூன் 14வரை இருக்கிறது. இதை இப்படத்தின் படக்குழு வெளியிட்டுள்ளது. அதுபோல, சிவகார்த்திகேயன் தரப்பும், ஹீரோ என்கிற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிந்துள்ளது. கடந்த பிப்ரவரி 22ம் தேதி இதற்கான கடிதத்தை தயாரிப்பு தரப்பு அளித்துள்ளது. இப்படத்துக்கும் அதே ஹீரோ தலைப்பை தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்துள்ளது.
தெலுங்கில் இதற்கு முன்பு 1984ல் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான படமும், 2008ல் நிதின் நடிப்பில் வெளியான படமும் ஹீரோ என்ற தலைப்பிலேயே வெளியானது. அதன்படி பார்த்தால் விஜய் தேவரகொண்டாவின் இந்த படம் தெலுங்கில் மூன்றாவது ஹீரோ தலைப்பிட்ட படம். தவிர, உச்ச நடிகரான சிவகார்த்திகேயனின் படத்துக்கும் அதே தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால், இரண்டு தரப்பில் ஏதேனும் ஒரு தரப்பு படத்தின் தலைப்பை மாற்றியாக வேண்டியது கட்டாயம் என்பதே சூழல்.