பொள்ளாச்சியை மிஞ்சும் வேடசந்தூர் தனியார் மில் மர்ம மரணங்கள்- வடதமிழக இளம் பெண்கள் திடீர் மாயம் -அரசு நடவடிக்கை எடுக்குமா
தமிழகத்தையே உலுக்கியிருக்கும் பொள்ளாச்சி பலாத்காரங்களை மிஞ்சும் வகையில் வேடசந்தூர் தனியார் மில்களில் மர்ம சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகின்றன. தனியார் மில்களில் இளம் பெண்கள் மர்மமாக மரணிப்பது, மில் விடுதிகளில் இருந்து இளம்பெண்கள் திடீரென மாயமாவது பல ஆண்டுகளாக தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்துக்கு வட இந்தியர்கள் படையெடுத்து கூலித் தொழிலாளர்களாக அலைகின்றனர். இதேபோல் வடதமிழகத்து இளம்பெண்கள் வேடசந்தூர் வட்டத்தில் தனியார் மில்களில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த இளம்பெண்கள் தனியார் மில்கள் நடத்தும் விடுதிகளில்தான் தங்குகின்றனர். இப்பெண்கள் திடீரென மரணிப்பதும் இந்த மர்ம மரணங்கள் மூடி மறைக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன.
அதேபோல் விடுதியில் தங்கிய இளம்பெண்கள் மாயமாவதும் அவ்வப்போது நடைபெறுகின்றன. இளம்பெண்கள் மரணத்தின் போது அந்த பெற்றோர்களின் கதறல்களை ‘பொறுப்புமிக்க’ ஊடகங்கள் மூடி மறைப்பதும் இதற்காக தனியார் மில் நிறுவனங்களிடம் பெரும் தொகையை லஞ்சமாக பெறும் அவலமும் நிகழ்கிறது.
பொள்ளாச்சியை போன்ற ஒரு பேரவலம் நிகழ்வதற்கு முன்னர் வேடசந்தூர் மர்ம மரணங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; வட தமிழகப் பெண்கள் உயிருக்கும் உத்தரவாதத்துக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது தான் பொதுமக்களின் வேண்டுகோள்.