சமூக வலைதளங்ளில் உஷாரா இருங்க... பொள்ளாச்சி சம்பவம் ஒரு நல்ல பாடம்!
பொள்ளாச்சியில் நம் சகோதரிகளுக்கு நிகழ்ந்துள்ள கொடுமையை நினைத்தால் மனம் பதறுகிறது; இதுபோல் இன்னும் எத்தனை 'பொள்ளாச்சிகள்' வெளிச்சத்துக்கு வராமல் இருக்கின்றனவோ? அதே நேரம், இச்சம்பவம் பெற்றோர்களுக்கு ஒரு நல்ல பாடமாக உள்ளது.
வேலை, வேலை என்று, குழந்தைகள் நலனுக்காக மாடாக உழைக்கிறோம். நல்ல பள்ளியில் அதிக கட்டணம் செலுத்தி சேர்க்கிறோம். அத்துடன் கடமை முடிந்ததாக பெற்றோர் கருதிவிடுகின்றனர். ஆனால், இன்று செல்போன் என்ற சாதனம், குழந்தைகளின் கைக்குள் இருப்பதை மறந்துவிடுகிறோம்.
நவீன உலகில், நம் வீட்டு குழந்தைகள் உட்பட சமூக வலைதளங்கள் பயன்படுத்தாதவர்களே இல்லை. பாதுகாப்பு கருதி, அவற்றை பயன்படுத்த அனுமதிக்காமல் விட்டால், தொழில் நுட்பத்தில் அவர்கள் பின்தங்கிவிடுவர். அதேநேரம், எதற்கும் எல்லை உண்டு என்பதையும் உணர்த்த வேண்டும்.நிஜத்தில் முன்பின் தெரியாவதர்களிடம் பேச தயங்கும் நாம் தான், சமூக வலைதளங்களில், யார், எத்தகைய குணம் கொண்டவர் என்பது கூட தெரியாமல், தனிப்பட்ட விவரங்கள் பகிர்கிறோம். நிழல் உலகமான இணையத்தளத்திலும், அந்நியர்களிடம் எச்சரிக்கை தேவை.
சாட்டிங்கில் நம் குழந்தைகள் யாருடன் பழகுகிறார்கள்; முன்பின் தெரியாத நபர்கள் வரச் சொல்லும் இடங்களுக்கு செல்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். அறிமுகம் இல்லாதவரை தனி இடத்தில் சந்திப்பதில் இருக்கும் ஆபத்தை உணர்த்த வேண்டும்.
உங்களது சமூக வலைதள கணக்குடன் உங்கள் குழந்தைகள் கணக்கையும் இணைத்தால், அவர்கள் உங்கள் கண்காணிப்பிலேயே இருப்பார்கள். அவர்களது நண்பர்கள் பட்டியலையும் அவ்வப்போது கவனித்துக் கொள்ளுங்கள்.
சமூக வலைத்தளங்களில் மொபைல்போன் எண், வீட்டு முகவரி, குடும்ப பெண்களின் படங்களை, நண்பர்கள் தவிர பிறர் பார்க்காதவாறு அமைத்துக் கொள்ளுங்கள்.
தனிப்பட்ட விஷயங்கள் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். 'அப்பா ஊரில் இல்லை; அம்மா வேலை முடித்து இரவு தான் வீடு திரும்புவார்கள்' போன்ற தகவல்களை பகிர்வது, ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.
இணையதளத்தில் என்ன பார்த்தீர்கள்? யாருடன் பேசினீர்கள்? என்றெல்லாம் கடுமையாக கேட்டு விசாரணை நடத்தாமல், குழந்தைகளிடம் நயமாக பேசி, ஆரோக்கியமாக விவாதியுங்கள். யாருடன் சாட் செய்கிறார்? தெரிந்தவரா? என்ன பேசிக் கொண்டார்கள்? என்பது அறிந்து, அதன் விளைவுகளை புரிய வைக்க வேண்டும்.
சமூக ஊடகங்களின் தீமையை மட்டுமே கண்டு ஒதுங்கக் கூடாது. எல்லாவற்றிலும் ஆதாயமும் இருக்கும் ஆபத்தும் இருக்கும். தண்ணீரில் இருந்து பாலை பிரித்துண்ணும் அன்னம் போல், நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்; வேண்டாதவற்றின் விபரீதத்தை குழந்தைகளுக்கு உணர்த்தினால், பொள்ளாச்சி கொடூரம் இனி எங்கும் நடக்காது.