பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம் 9.5 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதுகின்றனர்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி, வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
நடப்பு 2018-19-ம் கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு ( எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம், 12 ஆயிரத்து 546 பள்ளிகளை சேர்ந்த, 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ மாணவியர்; தனித்தேர்வர்கள், 38 ஆயிரத்து 176 பேர் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் எழுதுகின்றனர்.
நடப்பு ஆண்டில் இருந்து மொழிப்பாட தேர்வுகள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் மதியம் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறுகிறது. மற்ற பாடங்களுக்கான தேர்வுகள், வழக்கம் போல் காலை 10 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 12.45 மணி வரை நடக்கும்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பொதுத்தேர்வுக்காக, மொத்தம் 3 ஆயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 152 சிறைக்கைதிகள் 4 சிறை மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகளை தெரிவிக்க 9385494105, 9385494115, 9385494120, 9385494125 ஆகிய எண்களில், வரும் 29-ஆம் தேதி வரை, காலை 8 மணி முதல், இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.