மேடையில் கதறி அழுத தேவகவுடா குடும்பம்..!கிண்டலடித்த பாஜக ..!கர்நாடக அரசியல் கூத்து
கர்நாடகத்தில் இரு மகன்கள், மருமகள்களை அரசியல் பதவிகளில் அமர்த்திய தேவகவுடா வரும் மக்களவைத் தேர்தலில் இரு பேரன்களை களமிறக்கி உள்ளார். இதற்கு எதிராக கட்சிக்குள்ளும், எதிர்க்கட்சிகளிடையேயும் விமர்சனம் எழுவதை சுட்டிக் காட்டி பொது மேடையில் தேவகவுடா தேம்பித் தேம்பி அழுதார்.
உடன் மகனும், பேரனும் அழுததை விமர்சித்துள்ள பாஜக, இந்தக் குடும்பத்திற்கு இதே வேலையாப் போச்சு.... தேர்தல் நேரத்தில் மக்களிடம் கண்ணீர் விட்டு அழுது நாடகமாடுவார்கள். பின்னர் மக்களையே அழச் செய்வார்கள் என்று பாஜக கிண்டலடித்துள்ளது.
கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கோட்டையாக திகழ்வது தட்சிண கன்னடா எனப்படும் பழைய மைசூர் பகுதியாகும். சட்டசபை, மக்களவை தேர்தல்களில் இக்கட்சியே தொடர்ந்து வெற்றி பெறுவது வழக்கம். ஆனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் தேவகவுடா குடும்பம் தான் கோலோச்சுகிறது.
முதலில் இரு மகன்களான குமாரசாமி, ரேவண்ணா ஆகியோரை களமிறக்கி முதலமைச்சர், அமைச்சராக்கி அழகு பார்த்த கவுடா, தொடர்ந்து இரு மருமகள்களையும் எம்எல்ஏ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகளில் அமரச் செய்தார்.
தற்போது மக்களவைத் தேர்தலில் பேரன்கள் இருவரை வேட்பாளராக அறிவித்து உள்ளார். குமாரசாமியின் மகனும் இளம் நடிகருமான நிகில் குமாரை மாண்டியா தொகுதியிலும், ரேவண்ணாவின் மகன் பிரஜ்வாலுக்கு தனது பாரம்பரிய ஹாசன் தொகுதியையும் ஒதுக்கியுள்ளார் தேவகவுடா.
இதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் என்றால் கவுடா குடும்பம் மட்டும் தானா? வேறு யாரும் பதவிக்கு வரக்கூடாதா? என்ற விமர்சனங்கள் சொந்தக் கட்சிக்குள்ளும், எதிர்க்கட்சிகள் தரப்பிலும் ஏகத்துக்கும் வெடித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஹாசனில் நடந்த கட்சியின் பொதுக் கூட்டத்தில் வேட்பாளர்களாக பேரன்கள் இருவரின் பெயரை அறிவித்த தேவகவுடா மேடையிலேயே தேம்பித் தேம்பி அழுதார்.
என் பேரன்களை களமிறக்குவதை எல்லாரும் விமர்சிக்கிறார்கள். என் 60 ஆண்டு கால அரசியல் வாழ்வில் மக்களுக்காகத் தான் உழைக்கிறேன்.இந்த முறை பேரன்களை களமிறக்கியுள்ளேன். வெற்றி பெறச் செய்வது உங்கள் கையில்தான் உள்ளது என்று கூறி தேவகவுடா கதறியழ, அதைப் பார்த்து மகன்களும், பேரன்களும் என குடும்பமே கண்ணீர் வடித்தனர்.
தேவகவுடா கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் வெளியான சில நிமிடங்களிலேயே கர்நாடக பாஜக டிவிட்டரில் இதனை கிண்டலடித்து பதிவிட்டுள்ளது. தேவகவுடா குடும்பத்துக்கு கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றுவதே வாடிக்கையாப் போச்சு ... தேர்தல் நேரத்தில் மக்களிடம் கண்ணீர் விட்டு ஜெயித்துவிட்டு காலம் முழுக்க மக்களை அழச் செய்வார்கள் என்று கிண்டலடித்துள்ளது பாஜக.