முரண்டு பிடிக்கும் சீனா கடுப்பான இந்தியா - மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் சிக்கல்
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க செய்யும் இந்தியாவின் முயற்சியை, 4ஆவது முறையாக சீனா முறியடித்தது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை, இந்திய விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது.
இதனிடையே, ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய இந்தியா முயன்றது. ஆயுதங்கள் வாங்குவதற்கு தடை விதிப்பதோடு, அசாரை செயல்பட அனுமதிக்கும் பாகிஸ்தானுக்கும், இதன்மூலம் நெருக்கடி தர முடியும் என்று இந்தியா கருதியது.
ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில், சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவிக்கக்கோரி அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியன, பிப்ரவரி 27ல் தீர்மானம் கொண்டு வந்தன.
இதை ஆதரிக்க பெரும்பாலான நாடுகள் தயாராக இருந்த போதும், பாகிஸ்தான் ஆதரவு நாடான சீனா, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால், ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
மசூத் அசாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை, சீனா 4ஆவது முறையாக எடுத்திருப்பது, இந்தியாவுக்கு கடும் எரிச்சலை தந்துள்ளது. அசாருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சீனா கூறி வருவது குறிப்பிடத்தக்கது.