பிரச்சாரக் கூட்டங்களுக்கு லாரி, வாகனங்களில் மக்களை அழைத்து செல்லக்கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டிப்பு
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பொது மக்களை பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் அழைத்துச்செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தேர்தல் தொடர்பாக ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பிரச்சாரமும் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம், விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தது.
அரசியல் கட்சிகளின் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களுக்கு பொது மக்களை லாரி, பேருந்து போன்ற வாகனங்களில் அழைத்துச்செல்லக்கூடாது. பிளாஸ்டிக்கால் ஆன கொடி, பேனர்களை பயன்படுத்தக் கூடாது.
பொது இடங்களில் பேனர் வைக்கக் கூடாது. அனுமதியின்றி சுவர் விளம்பரங்களும் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுக் கூட்டங்களுக்கு ஆட்களைத் திரட்டிச் செல்லக் கூடாது என்ற நீதிபதிகளின் இந்த புதிய உத்தரவு அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.