பொள்ளாச்சி பாலியல் கொடூரம் - சிபிஐ விசாரணைக்கான அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு

பொள்ளாச்சி பகுதியில் மாணவிகள், இளம் பெண்களை பாலியல் கொடூரம் செய்த கும்பல் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்கக் கோரும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை குறிவைத்து கும்பல் ஒன்று பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டது தமிழகத்தை உறையச் செய்துள்ளது. அடுத்தடுத்து வரும் செய்திகள், வீடியோக்களால் தமிழகம் பதறிக் கிடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இளம் பெண்களை குறிப்பிட்ட கும்பல் சூறையாடி வந்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தக் கொடூரத்தில் ஈடுபட்ட கும்பலில் ஆளும் கட்சி முக்கியப் புள்ளியின் மகன்கள் மற்றும் பார் நாகராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருப்பது அம்பலமானாலும் காவல்துறை அவர்களை காப்பாற்றப் பார்க்கிறது, பிரச்னையை திசை திருப்பப் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. உண்மைக் குற்றவாளிகளைப் பிடித்து உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்களும் வெடித்துள்ளன.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இன்று வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றும் அரசாணையை தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, மத்திய அரசின் உள்துறைச் செயலாளர், பணியாளர் நலன் துறை அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.

More News >>