விஜயகாந்துடன் அரசியல் பேசவில்லை உடல் நலம் மட்டுமே விசாரித்தேன் - டாக்டர் ராமதாஸ் விளக்கம்

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று திடீரென சந்தித்தார். விஜயகாந்த் உடல் நிலை பற்றி மட்டுமே விசாரித்ததாகவும் அரசியல் பேசவில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 தேர்தலில் தேமுதிக - பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமகவும் அங்கம் வகித்தது. ஆனாலும் பாமகவும், தேமுதிகவும் பட்டும் படாமலே பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அந்தக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. பாஜகவில் பொன்.ராதாகிருஷ்ணனும், பாமகவில் தருமபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே ஜெயித்தார். அந்தத் தேர்தலுக்கு பிறகு தேமுதிக பாமக இடையே உறவு முறிந்தது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி அமைத்துப் போட்டியிட, பாமக தனித்துப் போட்டியட்டது.

தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் , பாமகவும் மீண்டும் இணைந்துள்ளன. 2014 தேர்தல் போல் இந்தத் தேர்தலிலும் இரு கட்சிகளும் ஒட்டாமல் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் விஜயகாந்தை திடீரென சந்தித்தார். டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோருடன் டாக்டர் ராமதாஸ் சென்ற போது, அதிமுக தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோரும் உடன் சென்றனர்.இதனால் இந்தச் சந்திப்பில் தேமுதிக, பாமக இடையே கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான இழுபறி குறித்த பேச்சுவார்த்தை 'நடப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் விஜயகாந்தை சந்தித்த பின் வெளியில் வந்த டாக்டர் ராமதாஸ், விஜயகாந்தின் உடல்நலம் பற்றி மட்டும் விசாரித்தேன். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறிவிட்டு வேறு கேள்விகளுக்கு நாளை பதிலளிக்கிறேன் என்று கூறிச் சென்று விட்டார்.

More News >>