கள்ளக்குறிச்சியில் நிற்கப் போவது சுதீஷா..? பிரேமலதாவா..? - அக்கா, தம்பி இடையே முட்டல் மோதல்

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட பிரேமலதாவுக்கும், எல்.கே.சுதீசுக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி 20,,தொகுதியில் கட்சி தொடங்கியது முதலே தேமுதிகவுக்கு நல்ல செல்வாக்கு இருந்து வருகிறது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.

இத் தடவை அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தும் போதே கள்ளக்குறிச்சி எங்களுக்கு வேண்டும் என்று அடம் பிடித்த தேமுதிகவுக்கு ஒதுக்கச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எல்.கே.சுதீஷ் அங்கு போட்டுயிடுவார் என்றே தேமுதிக தரப்பு மட்டுமின்றி அதிமுக கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களும் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்தனர். கூட்டணியில் பிரேமலதாவுக்கு ராஜ்யசபா சீட் உறுதி என்றும் கூறப்பட்டது.

இடையில் திமுகவுடனும் தேமுதிக கூட்டணிப் பேச்சு நடத்துவதாக எழுந்த சர்ச்சையால் தேமுதிகவின் நிலை பரிதாபமானது. கடைசியில் தேமுதிக நிலை பரிதாபமாக, பாஜகவின் கடும் முயற்சிக்குப் பின் வேறு வழியின்றி தேமுதிகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டது அதிமுக.

ஆனால் முதலில் பேசியபடி ராஜ்ய சபா சீட் கிடையாது. 4 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் என்று கறார் காட்டி விட்டது அதிமுக. ராஜ்ய சீட் இல்லாவிட்டால் என்ன? கள்ளக்குறிச்சியில் நில்லுங்கள் .. ஜெயிக்க வைப்பது என் பொறுப்பு என்று முதல்வர் எடப்பாடியும் உத்தரவாதம் கொடுத்து பிரேமலதாவை சமாதானப்படுத்தியுள்ளார். இதற்குக் காரணம் எடப்பாடியின் சொந்த மாவட்ட மான சேலம் மவட்டத்தின் 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குள் அடங்கியுள்ளதுதானாம்.

எடப்பாடியாரின் உத்தரவாதத்தால் தெம்புடன் கள்ளக்குறிச்சியில் குதிக்க பிரேமலதா தயாராகி விட்டாராம். இதனால் எம்.பி. கனவில் மிதந்த எல்.கே.சுதீஷ் சோகப்பாட்டு வாசிப்பதுடன், தொகுதி எனக்குத் தான் வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே எனக்கே தொகுதி என்று கூறிவிட்டு இப்போது பிடுங்கினால் என்ன அர்த்தம் என்று அக்காவுடன் சரிசமமாக மல்லுக்கட்டுகிறாராம் எல்.கே.சுதீஷ்.

More News >>