வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டுத்தான் தொகுதி ஒதுக்கீடு பேச்சில் இழுபறி...! இதுலவிருப்ப மனு வேறயா...?காங்கிரசில் புகைச்சல்
திமுக கூட்டணியில் 10 தொகுதிகளைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியும் பிற கட்சிகளைப் போல விருப்பமனு பெறப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வேட்பாளர்கள் யார்? என்று தீர்மானித்துத் தான் தொகுதி ஒதுக்கீடு பேச்சை நடத்திவிட்டு கண் துடைப்புக்காக விருப்ப மனு வேறயா? என்று காங்கிரசில் சீட் கிடைக்காது என்ற அதிருப்தியில் உள்ள தலைவர்கள் கிண்டலடித்துள்ளனர்.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி தவிர மற்ற 9 தொகுதிகள் எவை என்பது இன்னும் இழுபறியாகவே உள்ளது. இதற்குக் காரணம் காங்கிரசில் உள்ள கோஷ்டிகள்தான். டெல்லி மேலிடத் தலைவர்களின் சிபாரிசில் முக்கியத் தலைகள் ஆளாளுக்கு தொகுதி கேட்டு முட்டி மோதுகின்றனர். இதில் சேலம் தொகுதி தங்கபாலுவுக்கு, சிவகங்கை தொகுதி சிதம்பரம் குடும்பத்துக்கு, ஈரோடு தொகுதி இவிகேஎஸ் இளங்கோவனுக்கு, ஆரணி தொகுதியா அது கிருஷ்ணசாமிக்கு, தேனியா ஆரூண் குடும்பத்துக்கு .. விருது நகரா அது மாணிக்கம் தாகூருக்கு என்று கூறி தொகுதிகளைக் கேட்டு முட்டி மோதி வருவதால் திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பட்டியல் வெளியாவதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரசில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை நாளையும், நாளை மறுதினமும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் வழங்கலாம் என்ற அறிவிப்பை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ளார். ஏற்கனவே வேட்பாளர்களை முடிவு செய்து தொகுதிகளுக்கு கோஷ்டித் தலைகள் போராடி வரும் நிலையில் கண் துடைப்புக்காக விருப்ப மனு வேறயா? என்று நிச்சயம் சீட் கிடைக்காது என்ற விரக்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இந்த அறிவிப்பை கிண்டல் செய்துள்ளனர்.