தனது கடைசிப் படம் எது - மனம் திறந்த இயக்குநர் ராஜமௌலி

தனது கடைசிப் படம் எது என்பது குறித்த அறிவிப்பை இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்தின் மூலம் புகழின் உச்சம் தொட்டவர் இயக்குநர் ராஜமௌலி. இந்தப் படத்துக்கு பிறகு இவர் என்ன படம் இயக்க போகிறார் என்ற தகவல் வெளிவராமல் இருந்தன. மகாபாரதம் படத்தை ரூ.1000 கோடி பட்ஜெட்டில் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. இந்தநிலையில் தான், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரைக் கொண்டு ‘ஆர்ஆர்ஆர்’ (RRR) என்ற படத்தை தொடங்கினார் ராஜமௌலி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது படம் குறித்து பேசிய ராஜமௌலி, ``இப்படம் 1920-களில் நடக்கும் கதை. சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்லுரி சீதாராமா ராஜு, கொமரம் பீமா ஆகியோரை அடிப்படையாகக்கொண்ட புனைவு கதை.

இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உடன் முக்கியக் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை அலியா பட் மற்றும் நடிகர் அஜய் தேவ்கன், இயக்குநர் சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கவுள்ளனர்" எனத் தெரிவித்தார். அப்போது அவரிடம் மகாபாரதம் படத்தை தான் அடுத்த படமாக எடுக்கப்போவதாக கூறினீர்கள். அந்தப் படத்தை எப்போது எடுப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜமௌலி, ``மகாபாரதம் என் கனவு படம் என்று நான் முன்பே கூறிவிட்டேன். இதை நான் பலமுறை தெளிவுபடுத்திய பின்பும் எனது அடுத்த படம் மகாபாரதம் தான் என புரளி வந்துகொண்டே இருக்கிறது. எங்கு போனாலும் அதை பற்றி தான் கேட்கிறார்கள். மகாபாரதம் படத்தை எப்போது தொடங்கினாலும் அது தான் எனது கடைசி படமாக அல்லது படங்களாக இருக்கலாம். ஆனால் மகாபாரதம் எடுக்கும் வரை அதைப்பற்றிய யோசனை தான் 24 மணி நேரமும் எனது மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

More News >>