சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதி மாறுகிறதா? உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆணையம் பதில்

சித்திரை திருவிழாவுக்காக, மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற இயலாது என, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல், ஏழு கட்டகங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி, ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கும் முன், அந்த மாநிலத்தில் உள்ள முக்கிய நிகழ்வு, விழாக்கள், தேர்வுகள் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு, தேதிகள் நிர்ணயிக்கப்படும்.

ஆனால், இம்முறை தேர்தல் தேதி அறிவித்ததுமே சர்ச்சைகள் கிளம்பின. அந்த நேரத்தில் மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடக்கிறது. வாக்குப்பதிவு நாளான ஏப். 18ஆம் தேதி, மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டம், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருவிழா நேரத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டால், பொதுமக்கள் வாக்களிக்க வருவது குறையலாம், காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் உருவாகும் என்று கூறி, மதுரை தொகுதிக்கான தேர்தலை தள்ளி வைக்க, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் ஆணையமும், மதுரை, தேனி, திருவண்ணாமலை பகுதிகளிலும், உள்ளூரிலும் நடைபெறும் திருவிழாக்களை கருத்தில் கொள்ளவில்லை. இது குறித்து, இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர், மார்ச் 14 (இன்று) பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

அவ்வகையில், தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட இன்று தாக்கல் செய்யப்பட்ட பதிலில், மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நேரத்தை, மாலையில் இரண்டு மணிநேரம் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த பதிலால் திருப்தியடையாத நீதிமன்றம், கடமைக்காக தேர்தலை நடத்தாமல், களநிலவரம் புரியாமல் முடிவுகளை அதிகாரிகள் எடுக்கக்கூடாது. இவ்விவகாரத்தில் பதில் அளிக்காத தமிழக தேர்தல் அதிகாரியை, நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

More News >>