தஞ்சாவூர் தொகுதியில் களமிறங்குகிறது த.மா.கா. - எண்ணிக்கையைவிட எண்ணமே முக்கியம்: வாசன்
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, வரும் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதில் போட்டியிடுவதாக, அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில், ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு, ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் கடைசியாக இடம் பெற்ற த.மா.கா. முதல் கட்சியாக, தான் போட்டியிடும் தொகுதியை வெளியிட்டுள்ளது.
இது குறித்து, ஜி.கே. வாசன் கூறுகையில், தனித்தன்மையுள்ள கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. தேசிய நலனில் அக்கறை கொண்ட, மாநில கட்சி இது. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பதே எங்களின் நிலைப்பாடு.
தொண்டர்கள், தலைவர்களின் கருத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் சேர்ந்தோம். தேர்தல் கூட்டணி வேறு, இயக்கத்தின் கொள்கை என்பது வேறு. எண்ணிக்கையை கருதாமல், எண்ணத்தின் அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். வரும் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்றார்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7, பா.ஜ.க. வுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.