ஜல்லிக்கட்டு போராட்டம் போல் நாளை எதிரொலிக்கும் - பொள்ளாச்சியில் மாணவ மாணவிகள் எச்சரிக்கை
பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதைக் கண்டித்தும், பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து அப்பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இதன் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்பட்ட திருநாவுக்கரசு உள்பட 4 பேரை மட்டும் காவல்துறை கைது செய்துள்ளது. இதன் பின்னணியில் பெரிய கும்பல் உள்ளதாகக் கருதப்படுகிறது. அக்கும்பலைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவ மாணவிகள் பொள்ளாச்சி நகராட்சி அருகில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் ஆயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. இன்று காலை முதல் அவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், டிஎஸ்பி ஜெயகுமார் நேரடியாக வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். எனவே அதிகப் படியான காவல்துறையினர் அங்குக் குவிக்கப்பட்டனர். கூட்டத்தைக் கலைக்கத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் அவதிக்கு உள்ளாயினர். பின்னர் "மனிதச் சங்கிலி போல அமைத்துக் கொண்டு, கலைய மாட்டோம், கலைய மாட்டோம்" எனக் கோஷமிட்டனர் .
இதனால் ஆத்திரமடைந்த காவல்துறை அங்குள்ள அனைவரையும் இழுத்துத் தள்ளி வெளியேறுமாறு விரட்டினர். இதில் அப்பகுதியே பெரிய கலவரமாகக் காட்சியளித்தது. பாலியல் பலாத்காரத்தின் பின்னணியில் உள்ள நபர்களைக் கைது செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கைக்காகத் தான் இந்த போராட்டம் நடைபெற்றது. ஆனால், மாணவ மாணவிகளை மிக மோசமாக காவல்துறை கையாண்டு விரட்டியடித்து உள்ள சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவுபடுத்துவதாகவும், மேலும் நாளை அதைப் போலப் போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர் மாணவ மாணவிகள்.