விஜயகாந்தை தேடிப்போய் ராமதாஸ் சந்தித்த பின்னணி அம்பலமானது அன்புமணியின் அரசியல் பிளான்

உடல் நலன் விசாரிக்கும் சாக்கில், விஜயகாந்தின் ஆதரவை பெறுவதற்காகவே பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரை சந்தித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வட மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றுள்ள பா.ம.க.வும், தேமுதிகவும் அரசியலில் இதுவரை எதிரெதிர் துருவங்களாகவே இருந்து வந்தன. இந்த முறை மக்களவை தேர்தலில் அதிமுக அணியில் இணைந்ததன் மூலம், குடையின் கீழ் இக்கட்சிகளும் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.

இந்த சூழலில் தான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று சந்தித்து, உடல் நலம் விசாரித்தார். அப்போது, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணியும் உடனிருந்தார்.

விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாகவும், அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்றும், வழக்கம் போல் கூறிவிட்டு சென்றனர். ஆனால், விஜயகாந்தை அரசியல் காரணங்களுக்காகவே ராமதாசும், அன்புமணியும் சந்தித்து பேசியிருப்பது, தற்போது தகவல் தெரிய வந்துள்ளது.

காடுவெட்டி குரு தரப்பினரால் வாக்குகள் இழக்க வாய்ப்புள்ளதாக கருதும் பா.ம.க., அதை ஈடுகட்ட தேமுதிகவினரின் ஆதரவு தேவை என்று நினைக்கிறது. பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில், கணிசமாக தே.மு.தி.க.விற்கு ஆதரவு உள்ளது.

எனவே, தேமுதிக தலைமையை சாந்தப்படுத்தும் முயற்சியாக, அதன் தலைவர்களை ராமதாஸ் சந்தித்திருக்கிறார். இதன் மூலம் தேமுதிக தொண்டர்களின் வாக்குகளை பெறலாம் என்பது அன்புமணியின் கணக்கு.

எப்படியும் ஏழு தொகுதிகளில் நான்கில் வென்றாக வேண்டும் என்ற வைராக்கியத்தில் பா.ம.க. உள்ளது. காரணம், நான்கில் வெற்றி பெற்றால் தான், ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி என்று, பியூஷ் கோயல் கராராக சொல்கிறார்கள். அதனால் தான், வேறுவழியின்றி, விஜயகாந்தை ராமதாஸும், அன்புமணியும் சந்தித்துள்ளனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு வடசென்னை, பா.ம.க.வுக்கு மத்திய சென்னை தரப்படலாம் என்று தெரிகிறது. ஆனால், மத்திய சென்னையை அ.தி.மு.க.வுக்கு கொடுத்துவிட்டு தே.மு.தி.க.விடம் உள்ள வடசென்னையை பெற பா.ம.க. விரும்புகிறது. அதற்கு பதிலாக தே.மு.தி.க.வுக்கு விழுப்புரம் தொகுதியை விட்டுத்தரவும் பா.ம.க. தயாராக இருப்பதாக சொல்கிறார்கள்.

More News >>