நான்கு பேர் டக் அவுட் - 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!
ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய தனது முதல் இன்னிங்ஸில் 187 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக விராட் கோலி 54 ரன்களும், புஜாரா 50 ரன்களும், புவனேஷ்குமார் 30 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியும் 194 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் ஹசிம் அம்லா 61 ரன்களிலும், பிளாந்தர் 35 ரன்களிலும், ரபாடா 30 ரன்களிலும் வெளியேறினார். அற்புதமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது இந்திய அணியின் ஸ்கோரை விட 7 ரன்கள் அதிகமாகும்.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ரஹானே 48 ரன்களும், விராட் கோலி 41 ரன்களும், புவனேஷ்குமார் 30 ரன்களும், மொஹமது ஷமி 27 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பிளாந்தர், ரபாடா, மோர்னே மோர்கல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் அதன் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 4 ரன்களில் வெளியேறினார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.
டீன் எல்கர் 11 ரன்களிலும், ஹசிம் அம்லா 2 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஹசிம் அம்லா, டீன் எல்கர் ஜோடி பொறுமையாகவும், அதே சமயம் அடித்து ஆட வேண்டிய பந்துகளை பவுண்டரிக்கும் விளாசினார். இதனால், இருவரும் 2ஆவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது.
பிறகு, ஹசிம் அம்லா 52 ரன்கள் எடுத்து இஷாந்த் சர்மா பந்தில், ஹர்த்திக் பாண்டியாவின் துல்லியமான கேட்ச் மூலம் வெளியேறினார். அப்போது தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெறும் வாய்ப்பு இருந்தது.
ஆனால், இந்திய பந்துவீச்சாளர்களில் வேகத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா அணி சிதறியது. டி வில்லியர்ஸ் 6, கேப்டன் ஃபாப் டு பிளஸ்ஸி 2, குவிண்டன் டி காக் 0, பிளாந்தர் 10, பெலுக்வாயோ 0, ரபாடா 0, மோர்னே மோர்கல் 0, நிகிடி 4 என அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால், தென் ஆப்பிரிக்கா அணி கடைசி 53 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக நான்கு தென் ஆப்பிரிக்கா வீரர்கள் டக் அவுட் ஆகினர். அற்புதமாக பந்துவீசிய மொஹமது ஷமி 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆனால், மறுபுறம் கடுமையாக போராடிய தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 240 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனாலும், தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது.