கார் திருட்டை தடுக்க வருகிறது மைக்ரோடாட்

இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் பெருவாகனங்கள் திருடப்படுவதை தடுக்க புதிய தொழில்நுட்ப முறைக்கு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் வாகனங்கள் திருட்டு மற்றும் திருடிய வாகனங்களை கழற்றி விற்பது போன்ற குற்றச்செயல்கள் முற்றிலுமாக தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் மைக்ரோடாட் என்ற தொழில்நுட்பத்திற்கான தரக்கட்டுப்பாட்டினை இந்தியாவிலும் கொண்டு வரும் ஆய்வு பணியை மத்திய மோட்டார் வாகன விதிகள் - தரக்கட்டுப்பாட்டு குழு (CMVR-TSC) இறுதி செய்துள்ளது. விரைவில் இம்முறை பயனர்களின் விருப்ப தெரிவாக பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

2016ம் ஆண்டு கணக்குப்படி, அதிகபட்சமாக டெல்லியில் 38,644 வாகனங்கள் உள்பட இந்தியாவில் 2 லட்சத்து 10 ஆயிரங்கள் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட அநேக வாகனங்களை திருடர்கள் உதிரி பாகங்களாக பிரித்து விற்று விடுவதால் அவற்றை கண்டுபிடிக்க இயலாமலே போய் விடுகிறது.

இதை தடுப்பதற்கு லேசர் தொழில்நுட்பம் அடிப்படையிலான மைக்ரோடாட் முறை கடைபிடிக்கப்படுகிறது. இம்முறையில் 0.5 மில்லி மீட்டர் அளவிலான லேசர் புள்ளிகள் வாகனங்களின் எல்லா பாகங்களிலும் பதிக்கப்படும். இப்புள்ளிகள் வாகனத்திற்கான தனி குறியீட்டு எண் மற்றும் வாகன அடையாள எண் உள்ளிட்ட விவரங்களை கொண்டிருக்கும். இப்புள்ளிகளை புறஊதா (UV) கதிர்களை கொண்டு கண்டுபிடிக்க இயலும். வாகனங்கள் பிரிக்கப்பட்டாலும், உதிரி பாகங்களை ஆய்வு செய்து அது எந்த வாகனத்தின் பாகம் என்று அறிந்து கொள்ளலாம்.

கார், லாரி மற்றும் பேருந்து போன்ற வாகனங்களுக்கு குறைந்தது 10,000 புள்ளிகளும், இரு சக்கர வாகனங்களுக்கு குறைந்தது 5,000 புள்ளிகளும் தேவை. இந்த லேசர் புள்ளிகளில் உள்ள விவரங்கள் 15 ஆண்டுகளுக்கு மறையாமல் இருக்கவேண்டும் என்றும் தரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்திற்கு லேசர் புள்ளிகளை பதிப்பதற்கு ஏறக்குறைய ரூ.1,000 செலவாகும் என்று தெரிகிறது.

More News >>