வெல்கம் பேக் `தாதா - ஆறு வருடங்களுக்கு பிறகு ஐபிஎல்லுக்கு வரும் கங்குலி... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்....

இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றபின் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 2008 முதல் 2010-ம் ஆண்டு வரை விளையாடினார் கங்குலி. அதன்பின், கம்பீரிடம் பொறுப்பை கொடுத்தபின் புனே வாரியர்ஸ் அணியில் இடம்பெற்ற நிலையில் கிரிக்கெட்டில் இருந்து விலகினார்.

அதன்பின் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்துவந்தார். இந்த நிலையில் ஆறு வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் பங்கு வகிக்க உள்ளார் கங்குலி. அதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலோசகராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை உச்சி முகராத டெல்லி அணிக்கு இந்த முறை ரிக்கி பாண்டிங் பயிற்சியாளர், கங்குலி ஆலோசகர், ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன் என வித்தியாசமான காம்போவில் களமிறங்குகிறது. இதனால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி அணியில் இணைந்தது குறித்து இன்று பேசியுள்ள கங்குலி, ``டெல்லி அணியில் நானும் ஒரு அங்கமாக இருக்கப்போவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவேன். அணியுடன் இன்று இணைகிறேன். ஆறு வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் இணைவது சந்தோஷமாக உள்ளது. இதற்காக பிசிசிஐயில் வகித்து வந்த தொழில்நுட்பக் குழு பதவியில் இருந்து விலகிவிட்டேன்" எனக் கூறியுள்ளார்.

More News >>