3 சட்டசபை இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை - தேர்தல் ஆணையம் மீதும் உச்சநீதிமன்றம் அதிருப்தி
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை 15 நாட்களுக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தல் நடைபெறுவது சந்தேகம் தான்.மேலும் தேர்தல் ஆணையத்தை யாரோ தவறாக வழி நடத்துகிறார்களோ? என உச்ச நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலுடன் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.
வழக்கு இருப்பது என்று காரணம் கூறி தேர்தல் நடத்தாததில் உள்நோக்கம் இருப்பதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டதுடன், தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி திமுக சட்டத்துறைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணைய தரப்பில், வழக்கு நிலுவையைக் காரணம் காட்டி தேர்தலை நடத்த முடியாது என்று வாதிடப்பட்டது.திமுக தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி, வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார். அப்போது குறிப்பிட்ட நீதிபதி பாப்டே, ஏன் அவசரப்படுகிறீர்கள்? விசாரிக்க அவகாசம் வேண்டாமா? தேர்தலை தனியாக நடத்துவதால் என்ன பிரச்னை? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். அத்துடன் தேர்தல் ஆணையத்தையும் யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் அதிருப்தி தெரிவித்தார்.
இந்த வழக்கில் 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கில் அடுத்த விசாரணை 15 நாட்களுக்கு பின்னர் தான் இனி நடைபெறும் என்பதால் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்பது தெரிய வந்துள்ளது