பொள்ளாச்சி பாலியல் கொடூரம் கோவை எஸ்.பி க்கு சவுக்கடி கொடுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரியை அம்பலப்படுத்திய கோவை எஸ்.பி.பாண்டியராஜன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பகுதியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை குறிவைத்து பாலியல் கொடூரம் செய்த ஒரு கும்பல் குறித்த செய்திகளால் பதறிப் போயுள்ளது தமிழகம். இதன் பின்னணியில் ஆளும் கட்சி முக்கியப் புள்ளிகள், வாரிசுகள் என பலரது பெயரும் உள்ள தகவலால் 4 நாட்களாக கல்லூரி மாணவர்களும் கொந்தளித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் உள்ள முக்கியஸ்தர்களை காப்பாற்ற காவல்துறையும் துடியாய் துடிக்கிறது. இந்தப் பாலியல் கொடுமைகள் குறித்த தகவலை வெளிக்கொணர்ந்ததே பாதிக்கப்பட்ட ஒரு துணிச்சல்கார கல்லூரி மாணவி தான். அந்த மாணவி இந்த மாபாதக கும்பல் குறித்து போலீசில் புகார் கொடுக்க, அதனால் பார் நாகராஜ் கும்பல் மாணவியின் சகோதரரை அடித்து உதைத்துள்ளது. இதன் மூலமே இந்த பாலியல் கொடூரம் வெளிவந்தது.

ஆனால் பெயருக்கு 4 பேர் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறிய கோவை மாவட்ட எஸ்.பி, பாண்டியராஜன், சம்பவத்தில் 4 பேருக்கு மட்டுமே தொடர்பு .இதில் எந்த அரசியல் வாதிக்கோ அவர்களுடைய குடும்பத்தினருக்கோ தொடர்பு இல்லை என்று கூறிய எஸ்.பி, வேறு யாரையாவது தொடர்புபடுத்தி பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சர்த்திருந்தார். அதைவிடக் கொடுமை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அப்பட்டமாக செய்தியாளர்களிடம் எஸ்.பி.பாண்டியராஜன் கூறியது தான்.

பாலியல் வன்முறைக்கு ஆளாவோர் விவரங்களை ரகசியம் காக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை காற்றில் பறக்க விட்ட எஸ்.பி.யின் செயல் அனைத்துத் தரப்பினராலும் கடும் கண்டனத்துக்கு ஆளானது. ஆனாலும் அடுத்தடுத்து அந்த மாணவியின் பெயரை எஸ்.பி. பயன்படுத்தியது இந்தக் கொடுமைக்கு ஆளான மற்ற பெண்கள் புகார் அளிக்க முன்வரக் கூடாது என்ற நோக்கிலேயே செயல்பட்டதாகவும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

எஸ்.பி.யின் இந்தச் செயலுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது. அப்போது எஸ்.பி.பாண்டியராஜன் செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த நீதிபதிகள், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்டு புகார் தெரிவித்த பெண்னுக்கு நிவாரணமாக ரூ 25 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

More News >>