தொகுதிகளை இறுதி செய்வது குறித்து ஆலோசனையா? - விஜயகாந்துடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு

கடந்த 2014 தேர்தலில் தேமுதிக - பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமகவும் அங்கம் வகித்தது. ஆனாலும் பாமகவும், தேமுதிகவும் பட்டும் படாமலே பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அந்தக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. பாஜகவில் பொன்.ராதாகிருஷ்ணனும், பாமகவில் தருமபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே ஜெயித்தார். அந்தத் தேர்தலுக்கு பிறகு தேமுதிக பாமக இடையே உறவு முறிந்தது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி அமைத்துப் போட்டியிட, பாமக தனித்துப் போட்டியட்டது.

தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிகவும், பாமகவும் மீண்டும் இணைந்துள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பழைய கசப்புகளை மறந்து விஜயகாந்தை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ராமதாஸ். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. விஜயகாந்தை சந்தித்த பின் வெளியில் வந்த டாக்டர் ராமதாஸ், விஜயகாந்தின் உடல்நலம் பற்றி மட்டும் விசாரித்தேன். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை எனக் கூறினார். ஆனால் சந்திப்பில் தொகுதி பங்கீடு குறித்தும் பிரச்சாரங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் விஜயகாந்த்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்தித்தார். அப்போது விஜயகாந்த் உடல்நலம் குறித்து முதல்வர் விசாரித்தார். இந்த சந்திப்பின் போது பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். யாருக்கு எந்த தொகுதிகள் என்பதை இறுதி செய்வதில் நீட்டிக்கும் இழுபறியை சமாளிக்கவே இந்தச் சந்திப்பு நடைபெற்றுவருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

More News >>