தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று முதல் தவனை போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் தொடங்கியது.
இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ பாரலிஸிஸ் எனும் தொற்று நோய் குழந்தைகளை தாக்கக்கூடியது. இதனால், கை, கால்கள் முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு குழந்தைகளின் எதிர்காலமே பாதிக்கப்படுகிறது.இந்த போலியோவை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவனையாக போலியா சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான முதல் தவனை சொட்டு மருந்து இன்று (28.01.2018) தமிழகம் முழுவதும் முகாம் அமைத்து வழங்கப்படுகிறது.இன்று காலை முதலே, தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை முகாம்களுக்கு அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் பொது இடங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல், தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 சொட்டு மருந்து முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 5 வயதுக்குட்பட்ட சுமார் 7 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக 1640 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முகாம்கள் இன்று காலை 7 மணியளவில் தொடங்கிய நிலையில் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் மறவாமல் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.