ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்.... தனி அறையில் விசாரணை... - திருநாவுக்கரசிடம் கெடுபிடி காட்டும் சிபிசிஐடி
பொள்ளாச்சி பகுதியில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை குறிவைத்து பாலியல் கொடூரம் செய்த ஒரு கும்பல் குறித்த செய்திகளால் பதறிப் போயுள்ளது தமிழகம். இதன் பின்னணியில் ஆளும் கட்சி முக்கியப் புள்ளிகள், வாரிசுகள் என பலரது பெயரும் உள்ள தகவலால் 4 நாட்களாக கல்லூரி மாணவர்களும் கொந்தளித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த வழக்கை புதன்கிழமை முதல் சிபிசிஐடி விசாரித்து வருகிறது. முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை, தங்களது காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி நாகரஜன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திருநாவுக்கரசு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று, திருநாவுக்கரசை நான்கு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து அவரை விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்றனர். தற்போது அவர் எங்கு வைத்து விசாரணை செய்யப்படுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக - கேரள எல்லையில் உள்ள ஒரு மலைப்பகுதியில் தனியாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு ஆரம்பித்த போது திருநாவுக்கரசு திருப்பதியில் பதுங்கியிருந்தது வீடியோ வெளியிட்டார். அங்கு அவர் ஆதாரங்களை ஒழித்து வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரை திருப்பதி அழைத்துச் சென்று விசாரணை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் பேசப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய வீடியோக்களை அழிக்க கோரி ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம் அனுப்பியுள்ளது. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவுவதை தடுக்க வேண்டும் என அதில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.