திருமணத்துக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் ஆர்யா - சயிஷா ஜோடி
காதல் ஜோடிகளான ஆர்யா - சயிஷா திருமணம் சமீபத்தில் பிரம்மாண்டமாக நண்பர்கள், திரையுலகினர் மற்றும் உறவினர்கள் சூழ நடந்து முடிந்திருக்கிறது.
ஆர்யா தற்பொழுது காப்பான், மகாமுனி படங்களில் நடித்துவருகிறார். திருமணம் முடிந்த கையோடு மருதன், டிக் டிக் டிக் படங்களை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் `டெடி' படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் கரடி முக்கிய ரோலில் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. படத்திற்கு இமான் இசையமைக்கவிருக்கிறார். இந்நிலையில் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி யாரென்பதை படக்குழு அறிவிக்கவில்லை. தற்பொழுது ஆர்யாவுக்கு ஜோடியாக யார் நடிக்கவிருக்கிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.
டெடி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சயிஷா தான் நடிக்கவிருக்கிறாராம். இதுகுறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம். திருமணத்திற்குப் பிறகு பெரும்பாலும் நடிகைகள் படத்தில் நடிக்கமாட்டார்கள். ஆனால் சயிஷா திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கவிருக்கிறார். அதற்கு ஆர்யா என்றுமே பச்சைக்கொடி காட்டுவார் என்றே சொல்கிறார்கள்.
கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவும் சயிஷாவும் இணைந்து நடித்தார்கள். தற்பொழுது சூர்யாவின் காப்பான் படத்திலும் இருவரும் நடித்துவருகிறார்கள். இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகும் இணைந்து நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.