விபத்தினை தெரிவிக்கும் வசதியை விரிவாக்கிய கூகுள் மேப்

வழியில் நடந்துள்ள விபத்து மற்றும் வேக கண்காணிப்பு, தற்காலிக தடைகள் குறித்த விவரங்களை பதிவிடும் வசதியை உலக அளவில் விரிவாக்கியுள்ளது கூகுள் மேப். போக வேண்டிய இடத்தை பதிவிட்டால் வழியை காட்டி பயணிகளுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது கூகுள் மேப்.

பல்வேறு பயணிகள் தரும் தகவல்களை கொண்டு அது மேம்படுத்தப்படுகிறது. அந்த வகையில் கூகுள் மேப்பை பயன்படுத்தும் பயனர், தாம் செல்லும் வழியில் நடந்துள்ள விபத்து மற்றும் வேக கண்காணிப்பு மற்றும் தற்காலிக தடைகள் குறித்து தகவலை பதிவிட புதிய வசதியை (Add a report) கூகுள் மேப் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே 'வெய்ஸ்' (Waze) செயலியில் இருக்கும் வசதியை போன்று தனது பயனர்களிடமிருந்து தகவலை பெறுவதற்கு கூகுள் மேப், இதை விரிவான அளவில் நடைமுறைப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு சில பகுதிகளில் கூகுள் மேப் இந்த வசதியை அறிமுகம் செய்தது. நவம்பர் மாதம் சில மேம்படுத்தல்களும் செய்யப்பட்டன. தற்போது உலக அளவில் இது விரிவாக்கப்பட்டுள்ளது.

கூகுள் மேப்பின் அடிப்பகுதியில் காணப்படும் அம்புகுறியை (upward arrow) தட்டியோ அல்லது வழிகாட்டும் திரையில் உள்ள report button என்னும் புகார் பொத்தானை அழுத்தியோ தகவல்களை பதிவு செய்ய இயலும். ஒலி (audio) மற்றும் பெரிதாக்கும் (magnifying glass) பொத்தான்களுக்கு அடுத்ததாக இதற்கான பொத்தான் கொடுக்கப்பட்டிருக்கும்.

பல்வேறு பயனர்கள் கொடுக்கும் தகவல்களை பொறுத்து நீங்கள் அந்த வழியில் செல்லலாமா அல்லது மாற்று வழியை தேர்ந்தெடுக்கலாமா என்று முடிவு செய்ய இயலும். ஆண்ட்ராய்டு இயங்குதள பயனர்களுக்கு மட்டுமே தற்போது இது கிடைக்கிறது. ஆனாலும், கூகுள் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

More News >>