கூடா நட்பு கேடாய் முடியும்..!ஆ.ராசா நண்பர் சாதிக்பாட்ஷா அஞ்சலி விளம்பரத்தில் இடம்பெற்ற வாசகத்தால் பரபரப்பு
8 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சாவின் நினைவஞ்சலி விளம்பரத்தில் கூடா நட்பு கேடாய் முடியும்... என்ற வாசகம் இடம் பெற்று தேர்தல் நேரத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் சாதிக் பாட்சா. பெரம்பலூரில் பாய், தலையணைகளை தலையில் சுமந்து தெருத்தெருவாக விற்பனை செய்யும் சாதாரண வியாபாரியாக இருந்தார். படிப்படியாக வீட்டு உபயோகப்பொருள் வியாபாரம், ரியல் எஸ்டேட் என முன்னேற்றம் கண்ட சாதிக் பாட்சா, பெரம்பலூரில் திமுகவில் சாதாரண தொண்டனாகவும், வழக்கறிஞராகவும் இருந்த ஆ .ராசாவுடன் நட்பானார்.
96-ம் ஆண்டில் ராசா எம்.பி.யானவுடன் சாதிக்பாட்சாவின் நெருக்கம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து 99 -ல் வாஜ்பாய் அரசிலும், 2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலும் ஆ.ராசா மத்திய அமைச்சராக அவருடைய தயவால் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டிப் பறந்தார் சாதிக்பாட்சா.
கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற பெயரில் சென்னையில் நிறுவனம் தொடங்கி சாதிக்பாட்சா கோடிகளில் புரண்ட பொழுதுதான் 2010-ல் ஆ .ராசா 2ஜி வழக்கில் சிபிஐ வசம் சிக்கினார். 2ஜி விசாரணை வளையத்தில் அவருடைய நண்பரான சாதிக்பாட்சாவும் சிக்கினார். ரூ.1 லட்சம் முதலீட்டில் தொடங்கிய கிரீன் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 600 கோடி ௹பாயை எட்டியது எப்படி? 2ஜி முறைகேட்டில் வந்த பணத்தை சாதிக் பாட்ஷா நிறுவனத்தில் ஆ.ராசா முதலீடு செய்தாரா? என்று சிபிஐ கிடுக்கிப்பிடி போட்டது.
தொடர்ச்சியாக டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு இதே நாளில் சாதிக் பாட்ஷா மர்மமான முறையில் இறந்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் சாதிக் பாட்சா தூக்கிட்டு தன் கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவருடைய மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது. அவ்வப்போது சாதிக் பாட்சா மரணம் குறித்த சர்ச்சைகள் எழுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் கூட சாதிக் பாட்சா மரணத்தில் உள்ள சந்தேகங்களை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு தயாரா? என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் தான் சாதிக் பாட்சாவின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முன்னணி நாளிதழ்கள் பலவற்றிலும் அஞ்சலி விளம்பரம் வெளியாகி உள்ளது. 'அதில் கூடா நட்பு கேடாய் முடியும்' என்பதற்கு நீ உவமையாய் ஆனாயே, உன் அன்பு முகம் கூட அறிந்திடாத ஆஷில், ஆதில் என்று சாதிக் பாட்சாவின் பிள்ளைகள் பெயரில் கொட்டை எழுத்தில் வாசகம் இடம் பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூடா நட்பு கேடாய் முடியும் என்ற வாசகம் மீண்டும் 2 ஜி வழக்கு, சாதிக் பாட்சா மர்ம மரணத்தை நினைவுபடுத்தி, யாரையோ பழி.