பொள்ளாச்சியைத் தொடர்ந்து நாகையிலுமா!- தொடரும் புகார் பட்டியல்

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தின் தாக்கம் அடங்குவதற்குள், தமிழகத்தில் மீண்டும் ஒரு விவகாரம் வெடித்துள்ளது. இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரைக் கைது செய்துள்ள காவல்துறை விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சமூக வலைத்தளத்தின் வழியாக இளம் பெண்களை, தங்களது வலையில் சிக்கவைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த காமக்கொடியவர்களை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். அதில், பாதிக்கப்பட்ட பல பெண்களின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டது. அதோடு, வீடியோக்கள், சமூக ஊடகங்களில் வெளியாகி தமிழக மக்களின் நெஞ்சங்களை அதிர வைத்துள்ளது. குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் எனத் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் அங்கங்கே நடந்து வருகின்றன. தற்போது, இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூரச் சம்பவத்தின் அதிர்வுகள் அடங்குவதற்குள், மேலும் ஒரு விவகாரம் நாகையில் உருவாகியுள்ளது. நாக்கை மாவட்டம் வெளிப்பாளையம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த சுந்தர், சென்னையில் கார் ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சுந்தரின் சதிவலையில் சிக்கியுள்ளார். சுந்தரின், பாலியல் சீண்டல்களைத் தாங்கிக் கொள்ள முடியாத அப்பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீசாருக்கு பல திடுக்கிடும் அதிர்ச்சிகள் காத்திருந்தன. கார் ஓட்டுநராக பணிபுரியும் சுந்தர், தன் காரில் பயணம் மேற்கொள்ளும் இளம் பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, ஆசை வார்த்தைகளைத் தூவி, தன் வலையில் சிக்கவைத்துள்ளார். மேலும், தன்னுடைய பாலியல் இச்சைகளுக்கு இணங்காத பெண்களிடம், அவர்களுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காண்பித்து மிரட்டிப் பணியவைத்துள்ளார்.

சுந்தரின் கைபேசியை ஆய்வு செய்தபோது, பல பெண்களிடம் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், வீடியோ பதிவுகளும் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், விசாரணையை அடுத்த கட்டத்திற்கு போலீசார் நகர்த்தியுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுபோல் குற்றங்கள் மேலும் அதிகரிக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More News >>