பேருந்து கட்டணம் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: பேருந்து கட்டண உயர்ந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், பேருந்து கட்டணத்தை சற்று குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு கடந்த 19ம் தேதி பேருந்து கட்டணத்தை உயர்த்த அறிவித்தது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல்வேறு கட்சிகளும் இதற்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தது.மேலும், ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள், பொது மக்கள், கட்சியினர் என தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இந்நிலையில், பேருந்து கட்டணத்தை சற்று குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல், விரைவு பேருந்துகளில் சிலோ மீட்டருக்கு 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும், சொகுசு பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 90 பைசாவில் இருந்து 85 பைசாவாகவும், அதிநவீன சொகுசு பேருந்துகளில் கி.மீக்கு 110 பைசாவில் இருந்து 100 பைசாவாகவும், குளிர்சாதன பேருந்துகளில் கி.மீக்கு 140 பைசாவில் இருந்து 130 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆக இருந்த நிலையில் ரூ.4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணம் ரூ.23ல் இருந்து ரூ.22 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாவட்டங்களில் நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.4க்கும், அதிகபட்ச கட்டணமாக ரூ.19ல் இருந்து ரூ.18க்கும் குறைக்கப்பட்டுள்ளது.