அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி ஒதுக்கீடு பட்டியல் - பாஜக, பாமக தொகுதிகள் கடைசி நேரத்தில் மாற்றம்
அதிமுக கூட்டணியில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. ஏற்கனவே முடிவு செய்த பட்டியலில் பாமக, பாஜக கட்சிகளுக்கு உறுதி செய்யப்பட்ட தொகுதிகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை ஜெட் வேகத்தில் விறுவிறுப்பாக ஆரம்பித்தது. ஆனால் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்குள் அதிமுக, பாஜக தலைவர்களுக்கு விழிபிதுங்கி விட்டது. கடைசியில் தொகுதிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு என்பது இழுபறியாகவே இருந்தது. திமுக பலமாக உள்ள தொகுதிகளை கூட்டணிகளுக்கு தள்ளிவிட அதிமுக முயன்றதை ஏற்காமல், தாங்கள் கேட்கும் தொகுதிகளிலேயே பாமக, பாஜக, தேமுதிக குறியாக இருந்ததே தொகுதி ஒதுக்கீட்டை இறுதி செய்வதில் இழுபறிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஒரு வழியாக கூட்டணிக் கட்சிகளை சமாதானம் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தொகுதி ஒதுக்கீடு பட்டியல் இன்று காலை 9.45 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளாசா ஓட்டலில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிடுகின்றனர்.
பட்டியலில் கடைசி நேர மாற்றமாக பாமகவுக்கு மத்திய சென்னைக்கு பதிலாக திண்டுக்கல்லும், பாஜகவுக்கு நீலகிரிக்கு பதிலாக ராமநாதபுரத்தையும் ஒதுக்க அதிமுக சம்மதித்து விட்டதாகக் கூறப்படுகிறது. வடசென்னையை ஏற்க மறுத்து முரண்டு பிடித்து வந்த தேமுதிகவை நேற்று விஜயகாந்த் உடன் சந்திப்பு நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமாதானம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.