பாமக குறிவைத்து பழிவாங்க துடிக்கும் திமுக..? 7 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னம் தான்
பாமக போட்டியிடும் 7 தொகுதிகளிலும் அக்கட்சியை பழி தீர்க்க குறிவைத்து விட்டது திமுக. மாம்பழம் போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் திமுக கூட்டணியில் அக்கட்சியை எதிர்க்கப் போவது உதயசூரியன் என்பதால் இப்போதே கலக்கத்தில் உள்ளது மாம்பழக்கட்சி.
அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகளை பேரம் பேசி முதன்முதலாக இணைந்தது பாமகதான். திமுகவுடனும் ஆரம்பத்தில் பேச்சு நடத்திவிட்டு திடீரென அதிமுகவுடன் சமரசமானதால் திமுக தரப்பு கடுப்படைந்தது. இதனால் பாமகவை குறிவைக்க திட்டம் தீட்டி வந்தது. பாமக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்பதை ஆரம்பம் முதலே மோப்பம் பிடித்து வந்த திமுக, தன் பக்கம் அந்தத் தொகுதிகளை ஒதுக்க ஆரம்பித்து விட்டது.
தற்போது அதிமுக கூட்டணியில் தருமபுரி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் ஆகிய 7 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. இதில் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், தருமபுரி, அரக்கோணம், கடலூர், திண்டுக்கல் ஆகிய 6 தொகுதிகளில் திமுக நேரடியாக பாமகவை எதிர்த்துப் போட்டியிடுகிறது. பாமக போட்டியிடும் விழுப்புரம் (தனி) தொகுதி திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்டாலும் அந்தக் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாம்பழம் சின்னம் போட்டியிடும் 7 தொகுதிகளிலுமே உதய சூரியனை திமுக தரப்பில் களம் இறக்கியுள்ளது பாமகவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக உள்ளது