ஒரே ஒரு ஓட்டு...அதற்கொரு பூத்..5 ஊழியர்கள் நாள் முழுக்க நடக்கணும்..! இது தான் ஜனநாயகம்
தேர்தல் வரப்போகிறது. நம் ஜனநாயக நாட்டில் 100 கோடி மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக இந்தத் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் படும் சிரமங்கள், எதிர்கொள்ளும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பனி, மழை, கரடுமுரடான மலைப்பிரதேசம், பாலைவனப் பிரதேசம் என்று பரவிக்கிடக்கும் மக்களைத் தேடிச் சென்று அவர்கள் ஒவ்வொருவரையும் வாக்களிக்கச் செய்வது தான் தேர்தல் ஆணையத்தின் தலையாயப் பணியாகும்.இதில் பல சுவாரஸ்யத் தகவல்களும் உண்டு.
இதில் ஒரே ஒரு வாக்காளருக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்குச் செல்ல ஊழியர்கள் படும் சிரமத்தைப் பார்க்கலாம். இந்தியாவின் வடகிழக்கு மூலையில் சீன எல்லையோரம் அமைந்துள்ள சின்னஞ் சிறு மாநிலம் அருணாச்சலப் பிரதேசம். மொத்த மக்கள் தொகையே 12 லட்சம் தான்.இதில் வாக்களிக்க தகுதியானவர்கள் 7.5 லட்சம் பேர். இம் மாநிலத்தில் 2 லோக்சபா , 60 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 11-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
முழுக்க மலைப்பிரதேசமான அருணாச்சலில் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் குறித்து பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஒரே ஒரு வாக்காளருக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு மலையில் 40 கி.மீ.தூரத்துக்கு 5 ஊழியர்கள் பயணிக்க வேண்டும். மாலிகான் என்ற கிராமத்தில் சில குடும்பத்தினர் வசித்தாலும் ஒரே ஒரு பெண்ணைத் தவிர மற்றவர்களுக்கு அருகிலே உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு உள்ளது. குழந்தைகளுடன் வசிக்கும் சோகிலா என்ற பெண்ணுக்காக மட்டும் தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 ஊழியர்கள் 40 கி.மீ. தூரத்துக்கு மலையில் நடையாகவே செல்ல வேண்டும். அந்த ஒரு பெண்மணி வாக்களிக்கும் வரை காலை முதல் காத்திருக்க வேண்டும்.
கடந்த தேர்தலின் அந்தப் பெண்ணுடன் அவருடைய கணவருக்கும் ஓட்டு இருந்தது. அப்போதும் 2 பேருக்காக இது போன்று தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. தற்போது அந்தப் பெண்ணின் கணவர் பிரிந்து போய்விட்டார் என்பதும் கூடுதல் தகவல்.
இமாச்சலில் மொத்தம் 2200 வாக்குச்சாவடிகளில் 10 வாக்காளர்களுக்கும் கீழ் உள்ளவர்களுக்காக 7 பூத்களும், 10 முதல் 100 வாக்காளர்களுக்காக 280 பூத்களும் அமைக்கப்பட்டுள்ளது.
நம் ஜனநாயக நாட்டில் தேர்தல் திருவிழாவில் ஒவ்வொரு வாக்காளரையும் ஜனநாயகக் கடமையாற்றச் செய்ய இது போன்று பல சவால்களை தேர்தல் ஆணையம் சந்தித்து வருகிறது.