ஆண்டிபட்டியில் அண்ணன் தம்பியை மோதவிட்ட அதிமுக, திமுக - இருவருக்குமே ஒற்றுமைகள் ஏராளம்
ஆண்டிபட்டி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுகவும் திமுகவும் அண்ணன், தம்பியை களத்தில் இறக்கி பலப்பரீட்சை நடத்தவிட்டுள்ளன. இதனால் ஆண்டிபட்டி தொகுதியில் சகோதர யுத்தத்தில் படு சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.
தமிழகத்தில் சட்ட மன்ற இடைத் தேர்தல் நடைபெற உள்ள 18 தொகுதிகளில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையை திரும்பச் செய்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொதுவாகவே இந்தத் தொகுதி 1984 முதலே ரொம்ப பிரசித்தம். அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபடி அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை ஜெயிக்க வைத்த தொகுதி ஆண்டிபட்டி . அதன் பின் ஜெயலலிதாவும் இதே ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தவர்தான் என்பதால் கடந்த 35 ஆண்டுகளாக ஆண்டிபட்டி பிரசித்தம்.
தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் டிடிவி தினகரனுக்கு அடுத்து முக்கியத் தலைவர்களில் ஒருவராக உள்ள தங்க. தமிழ்ச் செல்வனின் சொந்தத் தொகுதியும் இதுதான்.தினகரனுடன் கைகோர்த்ததால் இந்தத் தொகுதியின் எம்எல்ஏ பதவி தங்க.செல்வனிடமிருந்து பறிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இந்தத் தொகுதியில் செல்வாக்காக உள்ள தங்க. தமிழ்ச்செல்வனே அமமுக சார்பில் மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படும் நிலையில், திமுகவும், அதிமுகவும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகளை இத்தொகுதியில் வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளது பெருத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக சார்பில் ஆண்டிபட்டி ஒன்றிய பொறுப்பாளராக உள்ள ஆ.மகாராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் தற்போது ஒன்றிய செயலாளராக உள்ள ஆ.லோகிராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மகாராஜனும், லோகிராஜனும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் என்பது தான்.
அண்ணன் தம்பிகள் இருவருக்கும் திமுக, அதிமுகவில் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன.64 வயதாகும் மகாராஜன் சிறுவயது முதலே திமுகவில் உள்ளார். அதே போன்று 60 வயதாகும் லோகிராஜனும் சிறு வயது முதலே அதிமுகவில் கோலோச்சி வருபவர். சொந்த ஊரான முத்தனம் பட்டியில் இருந்து இவர்களுடைய அரசியல் பயணம் தொடங்கியுள்ளது. திமுகவில் மகாராஜன் கிளைச் செயலாளர் என்றால் அதிமுகவில் கிளைச் செயலாளராக லோகிராஜன் இருந்துள்ளார். ஆண்டிபட்டி ஒன்றிய சேர்மனாக ஒரு முறை மகாராஜனும், அடுத்த முறை உடன்பிறந்த லோகி ராஜனும் அந்தப் பொறுப்பில் இருந்துள்ளார். இருவருமே பள்ளிப் படிப்புதான் முடித்துள்ளனர். மூத்தவர் 8-ம் கிளாஸ், இளையவர் 9-ம் வகுப்பு மட்டுமே. இருவர் குடும்பத்திலும் மனைவி,ஒரு மகள், ஒரு மகன் மட்டுமே.
விவசாயம்தான் அடிப்படைத் தொழில் என்றாலும் இருவருமே அரசு காண்ட்ராக்டர்களாகவும் உள்ளனர். தற்போதும் இருவரும் அவரவர் கட்சியில் ஆண்டிபட்டி ஒன்றியத்தின் செயலாளராக உள்ளனர். இரு வேறு கட்சிகளிலும் இருவரும் தனித்தனியே பயணித்தாலும் இருவருக்குமிடையே இவ்வளவு ஒற்றுமைகள் உள்ள நிலையில் சகோதர யுத்தத்தில் ஜெயிக்கப்போவது இருவரில் ஒருவரா? அல்லது இருவரும் சேர்ந்து அமமுகவில் போட்டியிடும் தங்க. தமிழ்ச்செல்வனிடம் வெற்றியை பறிகொடுக்கப் போகிறார்களா? என்பது தான் ஆண்டிபட்டி வாக்காளர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது.