வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தல் அறிவிக்காதது தவறு - சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்

வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 சட்டசபைத்தொகுதிகளில் இடைத் தேர்தலை அறிவிக்காதது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளதால் 3 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம், அரவாக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் கூறி விட்டது. இதற்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகளிடையே கடும் கண்டனம் எழுந்தது. உள்நோக்கத் துடன் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டது.

மேலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் எம்.எல்.ஏ வாக இருந்து மறைந்த ஏ.கே.போஸ் வெற்றிக்கு எதிராக திமுகவில் போட்டியிட்ட டாக்டர் .சரவணன் என்பவரும் இடைததேர்தலை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். தாம் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறியும் கேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.

இதனால் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி, வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்காதது தவறு என்று கண்டித்தார். மேலும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால் திருப்பரங்குன்றம் மட்டுமின்றி ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தும் அறிவிப்பை தேர்தல் ஆணையம் எந்நேரத்திலும் வெளியிடலாம் எனத் தெரிகிறது.

More News >>