ஓபிஎஸ் - இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கொடுத்த ஷாக் - வேட்புமனு விவகாரத்தில் நாளை விசாரணை

அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது என ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வருபவர் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி. அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு விண்ணப்ப படிவத்தில் கையொப்பம் இட பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

ஆனால் விதிகளுக்கு மாறாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. எனவே ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையொப்பமிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறி கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். முதலில் இந்த வழக்கை மார்க் 28ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, தான் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கவுள்ளதால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கே.சி.பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று நாளை மனு அவசர வழக்காக விசாரிக்கப்படவுள்ளது. இதனால் அதிமுகவினர் சற்று பதற்றத்தில் உள்ளனர். சமீபத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டதாக தெரிவித்தார். இதனால் முன்பிருந்த பகை முடிவுக்கு வந்துவிட்டது எனப் பேசப்பட்டது. ஆனால் மறுநாளே செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரை நாங்கள் கட்சியில் சேர்க்கவில்லை. அவர்தான் அப்படி கூறிக்கொள்கிறார் என பேசி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இருவருக்கும் இடையே முட்டல் மோதல் மீண்டும் துவங்கியுள்ளது.

More News >>