சக ஊழியர்களுக்கு அதிர்ச்சியளித்த குடியரசுத் தலைவர் மகள்!
இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றுள்ளார். இதற்கு முன், பிகார் மாநில கவர்னராகவும் இருந்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மகள் ஸ்வாதி ஏர் இந்தியாவில் பணிப் பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். ஆனால், இதுவரை தான் ஒரு கவர்னரின் மகள் என்றோ தன் தந்தைதான் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் என்று யாரிடமும் அவர் கூறியது இல்லை. தந்தை பெயர் ஆர்.என். கோவிந்த் என்றும் தாயாரின் பெயர் சவிதா எனவும் அலுவலக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிறிது நாள்களுக்கு முன்னர் காரணம் சொல்லாமல் ஸவாதி விடுப்பு எடுத்துள்ளார். இப்போது தந்தை ஜனாதிபதி ஆகிவிட்டாலும் தொடர்ந்து விமானப்பணிப் பெண்ணாக பணிபுரியவே அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ''தந்தை நாட்டின் உயர்ந்த பதவிக்கு வந்திருக்கிறார் என்றால் அவரின் கடின உழைப்பே காரணம். எங்கள் அனைவரையுமே நல்ல முறையில் கல்வி கற்க வைத்து சொந்த காலில் நிற்க வைத்துள்ளார். நான் இப்போதும் சுயமாக இருப்பதையே அவர் விரும்புவார். அதனால், தொடர்ந்து விமானப் பணிப் பெண்ணாகவே பணி புரிவேன்' என டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் பட்டம் பெற்ற ஸ்வாதி கூறுகிறார்.
வடிவேலு ஒரு படத்தில் 'சத்தமில்லாம குடியிருக்காங்கப்பானு'சொல்வார். அது மாதிரியே ஸ்வாதியுடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் இப்போது உண்மை தெரிந்து அதிர்ச்சியும் வியப்பும் அடந்துள்ளனர்.