வேட்பாளர்களாக பிக்பாஸ் பிரபலம், நகைச்சுவை நடிகை -கமலின் தேர்தல் வியூகம்
By Suganya P
தமிழகத்தில், மக்களவை தேர்தலுடன் 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது.
தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தங்களது வேட்பாளர்கள் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, திமுக-வில் உள்ள காங்கிரஸைத் தவிர இதர கூட்டணி காட்சிகள் தங்களது தொகுதி வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.
இதனையடுத்து, திமுக பட்டியலில் இடம்பிடித்திருக்கும் குடும்பத்தினர் யார், அதிமுகவின் முக்கிய தலைவர்களின் வாரிசுகளுக்கு எந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது, அமமுக வேட்பாளர்கள் யார் போன்ற அலசல்கள் தொடங்கிவிட்டன. இதற்கிடையில், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பட்டியல் 20ம் தேதி வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு ஆன நிலையில் முதலாவதாகச் சந்திக்கும் தேர்தல் இதுவாகும். கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்றோடு முடிவடைந்த நிலையில், கமல் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த தேர்தலில் பாஜாகாவிடம் நேரடியாக மோதவும் திட்டமிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதனால், பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளில் பிரபலங்களை நிறுத்த முடிவாகியுள்ளது. நடிகை ஸ்ரீபிரியா, பிக்பாஸ் புகழ் சினேகன், நகைச்சுவை நடிகை கோவை சரளா இவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.