கோவை ஜல்லிக்கட்டு: சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு

கோவை: கோவை மாவட்டம், செட்டிப்பாளையத்தில் நேற்று முதன்முதலாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர் கார்த்திக் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

பொங்கல் திருநாளையொட்டி மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டு எந்த தடையுமின்றி நடந்தன. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று முதன்முதலாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சுமார் 750 காளைகளுடன் 500 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர்.

கோவை, செட்டிப்பாளையத்தில் சுமார் 25 ஏக்கர் கொண்ட திடலில், ஓம்கர் பவுண்டேஷன் மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தனர்.

மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிவந்த காளைகளை அடக்கும் முயற்சியில் மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். காளைகளும் நாங்கள் வீரர்களுக்கு சலைத்தவர்கள் இல்லை என்பது போல் சீறி பாய்ந்தன.

இந்நிலையில், இந்த போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர் கார்த்திக் என்பவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக கோபி என்பவருக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்றாவது பரிசாக மற்றொரு கார்த்திக் என்பவருக்கு மோட்டார் சைக்கிளும் வழங்கப்பட்டன.

மேலும், சிறந்த காளைக்கான பரிசாக அதன் உரிமையாளரும் ஜல்லிக்கட்டு பேரவை தலைவருமான ராஜசேகர் என்பவருக்கு கார் வழங்கப்பட்டது.

More News >>