கல்விக் கடன், பயிர்க் கடன் ரத்து கேபிள் கட்டணம் குறைப்பு: நேரடியாக காஸ் மானியம் - திமுக தேர்தல் வாக்குறுதி

மாணவர்களின் கல்விக் கடன், சிறு குறு விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும். கேபிள் டிவி கட்டணம் குறைப்பு, காஸ் மானியம் நேரடியாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் அறிவிப்புகள் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:மக்களவைத் தேர்தல்: திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளிட்டார் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை இணை ஆட்சி மொழியாக்க சட்டம் கொண்டு வரப்படும்

மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும்.டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். மீத்தேன் , ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் கைவிடப்படும்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் .

மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.மதுரை, சேலம், கோவை, திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரயில் பயணச் சலுகை வழங்கப்படும்

கேபிள் கட்டணங்கள் குறைக்கப்படும், கேஸ் மானியம் மீண்டும் நேரடியாக வழங்கப் படும்.

தனிநபர் ஆண்டு வருமானத்தை குறைந்த பட்சம் ரூ 1.5 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள 50 லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 41 முக்கிய அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகன் கதாநாயகி போன்றது என்று குறிப்பிட்ட ஸ்டாலின் நிச்சயம் வில்லனாக இருக்காது என்று குறிப்பிட்டார்.

More News >>