இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலத்தில் நடைபெற்ற ஆச்சர்யங்கள்..

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில், முதல் நாளில் விலைபோகாத வீரர்கள் நேற்று [28-01-18] மீண்டும் ஏலத்தில் விடப்பட்டனர். அதில் அஷ்வினை ஏலத்தில் எடுக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முரளி விஜய் ஏலத்துக்கு வந்த போது அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எடுத்துக்கொண்டது. சிக்சர் மன்னன் கிறிஸ் கெயிலை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு கூட எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை. அவர் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டியில் 18 சிக்ஸர்கள் அடித்து எதிரணியை துவம்சம் செய்ததை சேவாக் மட்டுமே பார்த்திருப்பார். மூன்றாவது முறையாக கிறிஸ் கெயிலை ஏலத்தில் அறிவித்தபோது, சேவாக் ஆலோசகராக இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எடுத்துக்கொண்டது. முந்தைய கட்டுரையில் சொன்னது போல் மீண்டும் ஐபிஎல்-ல் நம்மோடு பயணிக்கப் போகிறார் கிறிஸ் கெயில். இரண்டாம் நாள் ஏலத்தில் 2 தமிழக வீரர்கள் நல்ல விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். அவர்களில் சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வினை ரூ.2.2 கோடிக்கும், வாஷிங்டன் சுந்தரை ரூ.3.2 கோடிக்கும் பெங்களூரு அணி எடுத்துக்கொண்டது. அதுபோல் தமிழக வீரர் நடராஜனை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 கோடி ரூபாய்க்கு வாங்கியது. சென்ற சீசனில் எதிர்பார்த்த அளவு ஜொலிக்காததால் இந்த வருடம் அவரை எந்த அணியும் ஏலமெடுக்காத நிலை ஏற்பட்டது. அதனால் நடராஜனின் ஆரம்ப விலையான 40 லட்சத்திற்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது. ஆனால் தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சிறப்பாக பந்துவீசிய சாய் கிஷோரை யாரும் எடுக்கவில்லை.  இதுவரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத சுழற்பந்து வீச்சாளர்கள் ஏலத்தில் விடப்பட்டனர். இதில் கர்நாடகாவைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் கவுதம் ஏலத்தில் விடப்பட்டார். அவரது அடிப்படை விலை ரூ.20 லட்சம். அவரை ரூ 6.2 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இது அவரது அடிப்படை விலையிலிருந்து 31 மடங்கு ஆகும். நேபாளத்தை சேர்ந்த 17 வயதான சந்தீப் லாமிசானேவை டெல்லி டேர்டெவில்ஸ் அணி, அவரது அடிப்படை தொகையான ரூ. 20 லட்சத்துக்கு எடுத்துக்கொண்டது. இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கப்போகும் முதல் நேப்பாளி என்ற பெருமைக்கு சந்தீப் லாமிசானே சொந்தக்காரர் ஆகிறார். ஆப்கானிஸ்தானை சேர்ந்த 16 வயதான முஜீப் ஜார்தானை ரூ.4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்துக்கொண்டது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மூன்றாவது ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெறுகிறார் முஜீப் ஜார்தான். முன்னாதாக ரசித் கான் (ரூ. 9 கோடி), முகமது நபி (ரூ.1 கோடி) ஆகியோரை சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதுவரை ஏலம் மூலம் எடுக்கப்பட்ட வீரர்களில் மிகக்குறைந்த வயதை உடைய வீரர் என்றால் அது முஜீப் ஜார்தான் தான். இந்திய வேகப்பந்து வீச்சாளர் உனத்தகட்டை எடுக்க சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்குள்  கடும் போட்டி நிலவியது. இரு அணிகளும் சேர்ந்து அவரது ஏலத்தொகையை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர். ஒருகட்டத்தில் பென் ஸ்டோக்ஸை மிஞ்சும் அளவுக்கு இரு அணிகளும் ஏலம் கேட்டன. கடைசியில் சென்னை அணி ரூ.11 கோடியில் நின்றுகொண்டது. இந்நிலையில் திடீரென ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ரூ.11.50 கோடிக்கு எடுத்துக்கொண்டது. இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை தொடர்ந்து, அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் உனத்கட். சென்னை அணியை பொறுத்தவரை டோனியுடன் சேர்த்து, ஒன்பது முன்னணி வீரர்கள் 30 வயதை கடந்தவர்களாக உள்ளனர்.  அந்த வீரர்களின் வயது விபரம்;- இம்ரான் தாகீர் - 38 ஹர்பஜன் சிங் - 37​ மகேந்திரசிங் தோனி- 36 ஷேன் வாட்சன் - 36​ டுவைன் பிராவோ - 34​ டூபிளஸ்சிஸ் - 33​ ராயுடு - 32​ கேதார் ஜாதவ் - 32​ கரண் சர்மா - 30. இந்த வயது பிரச்சனை சென்னை ரசிகர்களிடம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 'சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு முதியோர் காப்பகம்' என்றும், "ஹர்பஜன்சிங் தமிழில் பொங்கல் வாழ்த்து சொன்னதற்காக அவரை சென்னை அணியில் எடுத்துள்ளார்கள்" என்றும் சென்னையின் தீவிர ரசிகர்கள் கிளப்பிவிட்டுள்ளார்கள்.
More News >>