கார்டு இல்லாமல் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கலாம்

சென்ற இடத்தில் அவசரமாக பணம் தேவைப்படுகிறது. கையில் பணம் இல்லை. பணம் மட்டுமல்ல; பணம் எடுப்பதற்கான டெபிட் கார்டும் இல்லை. என்ன செய்வது?

இந்த நிலையை சமாளிக்க எஸ்பிஐ என்னும் பாரத ஸ்டேட் வங்கி வழி செய்துள்ளது. மார்ச் 15ம் தேதி மும்பையில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் 'யோநா கேஷ்' என்ற புதிய முறையை தொடங்கி வைத்துள்ளார்.

'யோநா' (YONO) என்ற செயலியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்தச் செயலியை ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொள்ள வேண்டும். இந்தச் செயலியை பயன்படுத்தி எஸ்பிஐ பணப்பட்டுவாடா மையங்கள் மற்றும் யோநா பண மையங்களிலிருந்து பணம் எடுத்துக் கொள்ள முடியும்.

'யோநா' செயலிக்கு ஆறு இலக்க கடவுச் சொல்லை பயனர் உருவாக்கிக் கொள்ள வேண்டும். பணப்பட்டுவாடா மையத்தின் அருகே (எஸ்பிஐ ஏடிஎம் அல்லது யோநா மையம்) சென்றதும், பணம் எடுப்பதற்கான முறையீட்டை யோநா செயலி மூலம் அனுப்ப வேண்டும். அதன்பின்னர், பயனரின் மொபைல் எண்ணுக்கு ஆறு இலக்க ரகசிய குறியீட்டு எண் குறுஞ்செய்தி (SMS) மூலமாக வரும். அந்த ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி ஏடிஎம் மையத்திலிருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்த ரகசிய குறியீட்டு எண், அரை மணி நேரத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்தியா முழுவதும் தற்போது 16,500 எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் நடைமுறைக்கு வந்துள்ள இந்த செயல்பாடு விரைவில் வங்கியின் 60,000 ஏடிஎம் மையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற கூறப்படுகிறது.

இனி போன் மட்டும் போதும்; டெபிட் கார்டு தேவையில்லை!

More News >>