ஒட்டப்பிடாரம் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்த தடையில்லை - வழக்கு தள்ளுபடி

ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தலை எதிர்த்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இதனால் இடைத்தேர்தல் நடத்த தடையில்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக இருந்த 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி தொகுதிகளில் வழக்கை காரணம் காட்டி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.

இந்த 3 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தாதற்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததுடன் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளன.

திருப்பரங்குன்றம் தொகுதியில் வழக்கு தொடர்ந்திருந்த திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வழக்கை வாபஸ் பெற்ற நிலையில் அந்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் 2016 தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சுந்தர்ராஜனுக்கு எதிராக அவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஒட்டப்பிடாரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தாம் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக கிருஷ்ணசாமி வாபஸ் பெறுவதாக கூறியதையடுத்து வழக்கு தள்ளுபடியானது. இதனால் ஒட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தடையேதும் இல்லை என்றும், வழக்கு தள்ளுபடியான தகவல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார்.

திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து ஒட்டப்பிடாரம் தொகுதியிலும் தேர்தல் நடத்த தடையாக காரணம் கூறப்பட்ட வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக வாபஸ் பெறப்பட்டதால் இந்தத் தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>