நீட்டித்த குழப்பம்.... இரண்டு துணை முதல்வர்கள்.... -கோவா புதிய முதல்வர் பிரமோத் சாவந்த் யார்
கோவா மாநிலத்தில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பாஜக, மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி, கோவா பார்வேர்டு கட்சி, 3 சுயேட்சைகள் ஆகியோரின் ஆதரவில் ஆட்சி நடந்தது. ஆனால், மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மரணமடைந்தார்.
இதைத் தொடர்ந்து யார் முதல்வர் என்று கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டதால், மாநில அரசியலில் குழப்பமான சூழல் நிலவியது. குழப்பத்துக்கு காரணம் கோமந்தக் கட்சியும், கோவா பார்வேர்டு கட்சியும் முதல்வர் பதவியை கேட்டது தான். பின்னர் ஒருவழியாக பேசி சமாளித்த பாஜக இந்த இரண்டு கட்சிகளுக்கும் துணை முதல்வர் பதவியை ஒதுக்கீடு செய்தது.
முதலில் 11 மணிக்கு நடைபெறுவதாக இருந்த பதவியேற்பு விழா குழப்பத்தால் நள்ளிரவு இரண்டு மணிக்கு நடந்தது. கோவா சபாநாயகராக இருந்த பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் புதிய முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் கோவா ஃபார்வேர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய், மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியைச் சேர்ந்த சுதின் தவாலிகர் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர். கூடவே, பாரிக்கர் அமைச்சரவையில் அமைச்சகர்களாக இருந்த அனைவரும் மீண்டும் அமைச்சர் ஆகினர். இந்த விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிதாக முதல்வராக பதவியேற்றுள்ள பிரமோத் சாவந்த்துக்கு வயது 45 ஆகிறது. இவர் இளங்கலை ஆயுர்வேத மருத்துவர் பட்டம் பெற்றுள்ளார். இதையடுத்து சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவரது மனைவி சுலக்ஷனாவும் கோவா மாநில பாஜக மகிளா மோர்ச்சா பிரிவின் தலைவராக இருக்கிறார். மனோகர் பாரிக்கர் உடல்நிலை குன்றியபோது புதிய முதல்வருக்கான தேர்வு நடந்துகொண்டிருந்தது. அதன்படி கடந்த சில மாதங்களாகவே பிரமோத் சாவந்த் பெயர் முதல்வருக்கான பரிசீலனையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மனோகர் பாரிக்கர் மறைவால் பாஜகவின் பலம் 12 ஆக குறைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பலம் 14-ஆக உள்ளது. எனவே, ஆட்சியமைக்க உரிமை கோரி நேற்று முன்தினம் ஆளுநரிடம் காங்கிரஸ் கடிதம் அளித்தது. கூட்டணி கட்சியில் உள்ளவர்களை தக்கவைக்கும் விதமாகவே 4 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.