`2 புள்ளிகள் முக்கியமல்ல, நாடு தான் முக்கியம் - பாகிஸ்தான் போட்டி குறித்து கம்பீர்
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இதனால் உலகக்கோப்பையில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா விளையாடக்கூடாது என்ற கோரிக்கை வலுத்தது. இந்திய கிரிக்கெட் வாரியமும், வீரர்களும் இந்திய அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்து முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தற்போது பேசியுள்ளார். அதில்,``புல்வாமாவில் நடந்த தாக்குதலை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தை புறக்கணிப்பது கடினம் என்பது என்னால் உறுதியாக கூற முடியும். ஆனால், நாம் பாகிஸ்தானுக்கு எதிராக இருநாடுகளுக்கு இடையிலான தொடரில் விளையாடுவதில்லை.
அதேபோல் ஆசிய கோப்பையிலும் விளையாடாமல் இருக்க முடியும். ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடுவதை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடி 2 புள்ளிகள் கிடைப்பது முக்கியமல்ல. நாடு தான் முக்கியம், நமது ராணுவ வீரர்களின் உயிர் தான் முக்கியம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எல்லா வகையிலான போட்டியிலும் விளையாடுவதை இந்தியா தவிர்க்க வேண்டும். பாகிஸ்தான் அணியுடன் இறுதிப்போட்டியில் மோத வேண்டிய சூழ்நிலை வந்தால் கூட அந்த போட்டியையும் தவிர்க்க வேண்டும். அதேநேரம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடாது என்று முடிவு எடுத்துவிட்டால், ஒட்டுமொத்த நாட்டு மக்களும் அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகள் விட்டுக்கொடுக்க ஒவ்வொருவரும் மனதளவில் அதை ஏற்றுக் கொள்ள தயாராகி கொள்ள வேண்டும்." எனக் கூறியுள்ளார்.