மறைக்க முடியாத சிறந்த நினைவுகள் அது - வான்கடே மைதானத்தில் நெகிழ்ந்த யுவராஜ் சிங்

2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி மீண்டும் நினைவுக்கு வருகிறது என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

2014 மற்றும் 2015 ஐ.பி.எல். சீசனுக்கான ஏலங்களில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டவர் யுவராஜ் சிங். ஆனால் இந்த வருட ஐ.பி.எல். ஏலத்தின் முதல் சுற்றில் அடிப்படை விலைக்குக் கூட அவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை.

இறுதி சுற்றுகளில் மும்பை அணி அடிப்படை விலைக்கு எடுத்தது. கடந்த 4 ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில் பெரியளவில் பங்களிக்க முடியாமல் சுமாரான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார் யுவராஜ் சிங். இதனால் இந்த முறை அவரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வராத நிலையில் மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. இதனால் இந்த ஆண்டு மும்பை அணி சார்பில் விளையாடவுள்ள யுவராஜ் மும்பை மைதானமான வான்கடே ஸ்டேடியம் குறித்தும் பழைய நினைவுகள் குறித்தும் பேசியுள்ளார்.

பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்று வரும் அவர், ``2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி மீண்டும் நினைவுக்கு வருகிறது. இந்த மைதானத்துக்குள் நுழையும்போது அதுதான் முதலில் நினைவுக்கு வருகிறது. இது எனது மறைக்க முடியாத சிறந்த நினைவுகள்" எனப் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை யுவராஜ் சிங்கிற்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. தான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும் சிறப்பாக ஆடி தொடர் நாயகன் விருதைப்பெற்றார். 362 ரன்கள் மற்றும் 15 விக்கெடுகள் வீழ்த்தி தனது சிறப்பை அந்த தொடரில் கொடுத்து உலகக்கோப்பை வெல்ல காரணமாக அமைந்தார். இதனால் இவர் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக மாறியது.

உலககோப்பையை கையில் தொட்டதும், தொடர் நாயகன் அங்கீகாரம் கிடைத்ததும் இந்த வான்கடே மைதானத்தில் தான் என்பதால், இதனை நெருக்கமான மைதானம் என குறிப்பிட்டுள்ளார் யுவராஜ் சிங். முன்னதாக வராஜ் சிங் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை மும்பை இந்தியன்ஸ் சமூக வலைதளங்களில் வெளியிட்டு சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அதில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து அசத்தியுள்ளார்.

More News >>