அப்பாடா... கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கூட்டாளி கிடைச்சாச்சு - குடியரசு கட்சியுடன் கூட்டணி
செ.கு.தமிழரசன் தலைமையிலான இந்திய குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல். இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமலஹாசனை செ.கு.தமிழரசன் சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் செ.கு.தமிழரசன் கூறியதாவது:
ஒரு மக்களவைத் தொகுதியிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் மூன்றிலும் இந்திய குடியரசு கட்சி போட்டியிடுவதற்கு மக்கள் நீதி மையம் வாய்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் மாற்று அரசியலுக்கு மாற்றுக் கட்சியாக மக்கள் நீதி மய்யத்தை தேர்ந் தெடுத்திருக்கிறோம். அதிமுக பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதை நாங்கள் ஏற்கவில்லை.இதனால் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.
கூட்டணியில் இந்திய குடியரசு கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்தின் சின்னமாக பேட்டரி டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுக கூட்டணியில் இந்திய குடியரசுக் கட்சி தொடர்ந்து அங்கம் வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.